உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிரங்கள் வெளியாகியுள்ளன.

ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த உடனேயே  ஆபரேசன் கிளீன்’ என்ற பெயரில் இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.  முதல் 6 மாதங்களில் மட்டும் 430-க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடந்தப்பட்டன. ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு என்கவுண்ட்டர் விகிதம் அரங்கேற்றப்பட்டது. ஓராண்டு முடிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்ட்டர்கள் நடத்தியதும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்பதால், பதவி உயர்வுக்காகவும், காவல்துறையே கூலிப்படை அமர்த்தி படுகொலைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

.இந்நிலையில் ஆதித்யநாத் அரசே என்கவுண்ட்டர் படுகொலைகளின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.அதில் 2017 மார்ச்சில் ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து 2018 ஜூலை வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 3036 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 78 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 838 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர்; 7 ஆயிரத்து 43 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாகவும் அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.