imprisonment for sasikala husband natarajan

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

லண்டனிலிருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் போலி ஆவணங்களை தயாரித்து சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

சென்னை துறைமுகத்துக்கு லண்டனில் இருந்து லக்சஸ் ரக சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரை 1993-ம் ஆண்டு தயாரித்ததாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து குறைவான சுங்கவரி செலுத்தப்பட்டது.

இதன்மூலம், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி சசிகலாவின் கணவர் நடராஜன், வி.பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவானார். இதையடுத்து நடராஜன் உட்பட எஞ்சிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ல் உத்தரவி்ட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள், நிறுவனங்களிலும் கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, 1430 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துக்களின் ஆவணங்களும் போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், அந்த அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் இருந்து வெளிவரும் முன்னரே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.