நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி.! பொதுக்குழுவில் அதிமுக உறுதி-முக்கிய தீர்மானங்கள் என்ன?
20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சிறப்பு தீர்மானமாக ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யாத, எதிர்க்கட்சி தலைவர் பேச்சை இருட்டடிப்பு செய்வதற்கு கண்டனம், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சட்டமன்ற மரபுகளை கடைபிடிக்காத சட்டப்பேரவை தலைவருக்கு கண்டனம். கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம். சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கும், திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கும் கண்டனம். ஊழலில் திளைத்து நிற்கும் அரசுக்கும், தடுக்க நடவடிக்கை எடுக்காத முதலமைச்சருக்கும் கண்டனம். 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் அத்து மீறி நுழைந்த விவகாரம்: ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல். ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். உயர்க்கல்வியில் அவசர கதியில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் அரசுக்கு கண்டனம். தமிழ் மொழி உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை விழக்காடு மொழியாக கொண்டு வர வலியுறுத்தல். சமூக நீதிக்கு எதிரான திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கு கடும் கண்டனம். காவிரி நதி நீர் பிரச்சனையில் திமுகவின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்துக்கு கண்டனம். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம். தமிழகத்தில் முடங்கி போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கண்டனம். சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் வரை அனைத்து விலையையும் ஏற்றி மக்களை வஞ்சிக்கும் அரசுக்கு கண்டனம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மெத்தன போக்கில் செயல்படும் அரசுக்கு கண்டனம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற களப்பணி ஆற்றிட சூளுரை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.