பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முதல் நிலை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் சுமார் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்கனவே முகக் கவசம் கிருமிநாசினி மற்றும் முழு கவச உடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் விட்டமின் மாத்திரைகள், மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை இடத்தில் உள்ள சுமார் 100 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனையை இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் அம்மா மாளிகை கூட்டரங்கில் துவக்கிவைத்தார். இந்தப் பரிசோதனையானது ஒருவருக்கு எந்த அளவில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான பரிசோதனையாகும். இந்த பரிசோதனையானது மாநகராட்சியுடன் இணைந்து STRUMED சொலூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏஜிஎஸ் ஹோம் ஹெல்த்கேர் என்ற  நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி (ICMR) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராபிட் டெஸ்ட் கருவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த பரிசோதனையில் மூலம் வெறும் 15 நிமிடங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா இல்லையா என கண்டுபிடித்து தெரிவிக்க முடியும், இந்த பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு தொற்று உண்டாகி இருக்கிறதா இல்லையா எனவும் , ஒருவருக்கு தற்போதைக்கு தொற்று இருக்கிறதா எனவும்,  ஒருவர் தொற்று ஏற்பட்டு குணமடைந்து இருக்கிறாரா இல்லையா என எளிதில் கண்டறிய இயலும். ஒருவரின் உடலில் உருவாகி உள்ள நோய் எதிர்ப்பு சக்தியினை, அதன் அளவை கண்டறிந்து இந்தப் பரிசோதனையின் மூலம் பிளாஸ்மா நன்கொடையாளர்களையும் கண்டறிய இயலும், தொடர்ந்து ஆணையாளர் அவர்கள் மாநகராட்சி முதல்நிலை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்சனிக் ஆல்பம்-30 என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.