சட்டவிரோத பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் முயற்சி.. விடாமல் செக் வைக்கும் ஓபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் அதிரடியாக மனு!
சென்னையில் ஜூலை 11 தேதிக்கு நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றியெறிந்த நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகமும் கேபி முனுசாமியும் அறிவித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று புதிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று தமிழ்மகன் உசேன் ஜூலை 11 அன்று பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று அறிவித்தார். இதனாலே மேடையிலேயே, ‘இந்தப் பொதுக்குழு சட்ட விரோதமானது’ என்று அறிவித்துவிட்டு ஓபிஎஸ் தரப்பு வெளிநடப்பு செய்தது.
பொதுக்குழு முடிந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஐவர் நேற்று இரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் தரப்பு டெல்லிக்கு வந்ததாகக் கூறப்பட்டாலும் அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்பாக தீர்வு காண்பதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்போதைக்கு தேர்தல் ஆணையத்தை அணுக மாட்டோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகளை வைத்து தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு திடீரென முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவருடைய வழக்கறிஞர்கள், திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், "அதிமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு, கட்சி தலைமைப் பதவியை மாற்றம் செய்ய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முயற்சி மேற்கொள்கிறார்கள். இதற்காக வரும் ஜூலை 11ஆம் தேதி சட்ட விரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்காக முறையான அனுமதி எதுவும் இதுவரை பெறப்படவில்லை. எனவே ஜூலை 11 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும் கட்சிய்ன் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சியின் தலைமைப் பதவியை மாற்ற தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை கிரீன்வேல் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.