கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை ஐ.சி.எம்.ஆர்-ன் அறிவுறுத்தல்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனைகளில் அடுத்த வாரம் முதல் துவங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் புதிய தொற்று ஏற்படுவோர்  நிலவரம் தொடர்ச்சியாக 6 ஆயிரத்துக்கு உள்ளும், சென்னையில் ஆயிரத்து 300 க்குள்ளும் இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றார். 

மேலும், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளை அதிகம் செய்யும் மாநிலமும், 10 லட்சத்துக்கு அதிகமான பரிசோதனைகளை செய்துள்ள ஒரே மாநிலமும் தமிழகம்தான் எனக் கூறிய அவர், பொதுமக்களுக்கு தொடர்ந்து அரசு சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பொது சுகாதார சட்டத்தை மதிக்காமல் நடப்பது வேதனையளிக்கிறது. கொவிட்-19 என்பது ஒரு தொற்று நோய் என்று தெரிந்தும் பிறருக்கும் பரப்பும் வகையில் நடப்பவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் அரசு சார்பில் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டாலும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் ஆபத்தை உணராமல் பெரும்பாலானோர் வதந்திகளை நம்பி பரிசோதனை செய்வதை தவிர்கின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின் உயிரை காப்பாற்றுவது கடினம் என்பதால் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு நோயை குணப்படுத்த உதவிட வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பொது சுகாதார சட்டத்தின்படி தொற்று நோய் பரவல் காலங்களில் அரசு வெளியிடும் வழிமுறைகளான சமூக இடைவேளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்காமல் இருப்பவர்கள் மீது அதிகபடியான அபராதம் விதிப்பது, 3 மாத சிறை போன்ற கடும் நடவடிக்கைகள் அடங்கிய சட்டம் மிக விரைவில் அமலாகும் என தெரிவித்தார். மேலும், கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை ஐ.சி.எம்.ஆர்-ன் அறிவுறுத்தல்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனைகளில் அடுத்த வாரம் முதல் துவங்கப்படும் எனவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல்  கோவிட்-19 பரிசோதனை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொவிட் அல்லா நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்ற அவர் மழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய் பரவல்களை தடுக்கவும் குணப்படுத்தவும் அதே குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தனியார் மருத்துவமனைகளில் இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் மருத்துவ பணிகள் இயக்குநரகம் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டபின் சென்னையை பொறுத்தவரை சவாலான மண்டலங்களில் காய்ச்சல் முகாம்கள், வீடு வீடாக பரிசோதனை உள்ளிட்ட களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், இ-பாஸ் தளர்வுக்குப்பின் சென்னைக்குள் 3.25 லட்சம் பேர் வந்துள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 39 ஆயிரம் மருத்துவ முகாம்கள் சென்னையில் நடத்தப்பட்டு இதுவரை 21 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாம் இன்னும் 3-4 மாதங்களுக்கு கோவிட் பாதிப்பு தீவிரமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களான முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது மிக அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.