நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க பேனர், போஸ்டர், கட் அவுட்டுகளில் ரஜினியின் புகைப்படத்தை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக அவரது தந்தை எஸ்.ஏ.சி. கூறி வருகிறார். அண்மையில் கூட ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்களும் விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்று போஸ்டர் அடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர்.

விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்கள் பலவற்றில் வருங்கால சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினியை குரு என்றும் விஜயை சிஷ்யன் என்றும் கூறி வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் நேற்று ரஜினி சூப்பர் ஸ்டார் நாளை விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டியிருந்தனர். பெரும்பாலான ரசிகர்கள் ரஜினியின் புகைப்படத்தை விஜயை வாழ்த்துவதற்கான பேனர்களில் பயன்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் ரஜினியும் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். எனவே  இனி மக்கள் இயக்க போஸ்டர்களிலம் சரி, பேனர்களிலும் சரி விஜய் அவரது அப்பா எஸ்.ஏ.சி, தலைமை மன்ற நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பேனர்கள் அமைக்கும் ரசிகர்கள் போன்றோரின் புகைப்படங்களை தவிர வேறு யாருடையை புகைப்படங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் இயக்க தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தலைமை மன்ற நிர்வாகி ஒருவர், இனி ரஜினியின் புகைப்படங்களை மக்கள் இயக்க பேனர்களில் பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வளரும் வரை  திரைப்படங்களில் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்ட விஜய் வளர்ந்த பிறகு அவரது புகைப்படத்தை ரசிகர்கள் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல விஜய் ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது.