நாற்பதாயிரம் கூட பிஸ் கட்ட முடியாத மாணவர்கள் எதற்கு மருத்துவக் கல்லூரிக்கு போக வேண்டும் என துரைமுருகனின் நக்கல் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் கண்டனம் பின்வருமாறு:  வறுமையை திறமையால் வென்றெடுக்க முயலும் மாணவ சமூகத்தை மிகவும் மலிவாக பேசி கேவலப் படுத்தி இருக்கிறார் கோமாளி துரைமுருகன்.

இதே துரைமுருகன் தனது சட்டக் கல்லூரி படிப்பை  முடித்தது புரட்சித்தலைவரின் வாரி வழங்கும் வள்ளல் குணத்தால்தான் என்பது வரலாறு. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பும், சந்தர்ப்பமும் சம காலத்தில் எந்த மாணவனுக்கும் கிடைத்து விடக்கூடாது. அது அரசாங்கத்தால் கூட அடிமட்ட குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைத்து விடக்கூடாது என  நினைக்கிற துரைமுருகனின் சாடிஸ்ட் புத்தியை நினைத்தால் காரி உமிழ்ந்துவிடத்தான் தோன்றுகிறது. 

மரத்தடி வகுப்புகளை எல்லாம்  மடிக்கணினி வகுப்புகளாக மாற்றி, புத்தகம், நோட்டு புத்தகம், வண்ணப் பென்சில்கள், வரலாறு புவியியல் வரைபடங்கள், சீருடை காலணிகள், இப்படியாக மதிப்பெண் தவிர மற்றதையெல்லாம் வழங்கி கல்வி ஒருவருக்கு கிடைக்க பட்டால் அவர் எல்லாமும் பெற்றவராவார் என்னும் சமூகநீதியை  மலர் வைக்க போராடி வருகிறது அம்மா வழியிலான எடப்பாடி தலைமையிலான அரசு. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும், மருத்துவர்களாக உயர்ந்திட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி அதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் 113 மருத்துவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். இந்த சமூக நீதிப் போற்றும் அரசாக, அறிவுசார் மாநிலமாக தமிழகத்தை மாற்றிட அயராது பாடுபடும் அதிமுக அரசின் பெருமையை கண்டு காணப் பொறுக்காத துரைமுருகன் 40000 ரூபாய் கட்டணம் கட்ட முடியாத அரசு பள்ளி மாணவர்கள் எதற்காக மருத்துவக் கல்லூரிக்கு போக வேண்டும் என்று ஏளனமாய் பேசி எள்ளி நகையாடி இருக்கிறார். 

உழைக்காமல், ஒரு சொட்டு வியர்வையும் வடிக்காமல் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆறு அறிவும் இல்லாத ஆட்கள் எல்லாம் பல நூறு கோடியில் ஏழாம் அறிவு என்று கோடிகளைக் கொட்டி சினிமா எடுத்து  திரியும்போது, திறமை கொண்ட மாணவர்கள் தங்கள் வறுமையை அரசின் உதவியோடு வென்றெடுப்பது குற்றமா? இதற்கு திமுக தலைமை பதில் சொல்ல வேண்டும். துரைமுருகனின் நாக்கு தான் துருப்பிடித்த திமுகவின் போக்கை காட்டி இருக்கிறது. மாணவ சமூகத்தை இழிவு படுத்திய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்களை மாணவச் சமூகம் மண்டியிட வைக்கும் என்பது சத்தியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.