கிட்டத்தட்ட அதிமுகவில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராகி விட்டார். தொடர்ந்து அவரது வீட்டில் ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் பதவி ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை ஓ.பி.எஸ்., எடுக்கலாம் என்ற உச்சகட்ட பதற்றம் அதிமுகவில் நிலவுகிறது. ஓ.பி.எஸ் இல்லம் முன் அதிமுக தொண்டர்கள் திரண்டு ஆதரவு முழக்கங்களையும் எழுப்பி வருவதால் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
 
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையேயான பெரும் மோதலாகி விட்டது. செயற்குழுவில் கட்சி நிர்வாகிகள் முன் இருவரும் நேருக்கு நேராக தடித்த வார்த்தைகளால் மோதிக் கொண்டது அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவுக்கு வழி வகுத்து விடுமோ? என்ற பீதியிலும், அச்சத்திலும் அக்கட்சி தொண்டர்கள் ஆழ்ந்துள்ளனர்.

மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில் கெட்டியாக அமர்ந்துவிட்ட எடப்பாடியார் கட்சியிலும், ஆட்சியிலும் தமக்குத் தான் அதிக முக்கியத்துவமும், செல்வாக்கும் உள்ளது என்பதை நிரூபிக்க முயல்வது போல அவரது நடவடிக்கைகள் உள்ளது. இதற்கு கொங்கு மண்டல அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றோர் பகிரங்கமாகவே காய் நகர்த்துகின்றனர்.

 செயற்குழுவில் பங்கேற்ற அமைச்சர்களில் பெரும்பாலானோரும் எடப்பாடி ஆதரவு நிலையில் இருக்க, சிலரே நமக்கேன் வம்பு என மெளனம் சாதித்ததும் ஓ.பி.எஸ்.,சுக்கு பின்னடைவு தான் என்றாலும், இந்த முறை ஓ.பி.எஸ் விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை. இதனாலேயே ஓ.பி.ஸ் – இ.பி.எஸ் இடையே நேருக்கு நேர் காரசார வாக்குவாதம் அரங்கேறி , என்ன நோக்கத்திற்காக செயற்குழு கூட்டப்பட்டதோ முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யாமலே கூட்டம் முடிவடைந்தது.

கூட்டம் முடிந்த பின், முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என கே.பி.முனுசாமி அறிவித்தாலும், அது சாத்தியமா? என்ற கேள்விதான் இப்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது. ஏனெனில் இந்த விஷயத்தில் எடப்பாடியும் சரி, ஓ.பி.எஸும் சரி, விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை என்பது அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக ஓ.பி.எஸ் எடுத்து வரும் தடாலடி நடவடிக்கைகள் உற்று நோக்க வைக்கிறது. என்ன நடந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற அதிரடி முடிவுக்கு ஓ.பி.எஸ் துணிந்து விட்டதாகவே தெரிகிறது.

நேற்றே மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு ஓ.பி.எஸ் தயாராகி விட்டதாகவே அடுத்தடுத்து அரங்கேறி வரும் காட்சிகள் உணர்த்துகின்றன. வழக்கமாக கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியுடன் பங்கேற்கும் ஓ.பி.எஸ், நேற்று காலை நடந்த கூட்டத்தை புறக்கணித்தார். இது சமரசம் இல்லை என்பதற்கு பிள்ளையார் சுழி என்றால், அடுத்து ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு தான் அதிமுக மூத்த நிர்வாகிகளை கலங்கடித்துவிட்டது எனலாம்.

தனது அரசு காரில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழட்ட உதவியாளருக்கு ஓ.பி.எஸ் உத்தரவிட்டு விட்டு சொந்தக் காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு தேனிக்கு புறப்பட ஆயத்தமானது தான் அனைவரையும் கலங்கடித்துவிட்டது. துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் தீயாகப் பரவ அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் ஓடோடி வந்து சமாதானப் படலத்தில் இறங்கினர். ஒரு வழியாக ராஜினாமா முடிவையும், தேனிக்கு செல்லும் முடிவையும் கைவிடச் செய்ய சமாதானம் செய்தாலும், ஓ.பி.எஸின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என பகீர் ரகமாகவே உள்ளது.

நேற்று தனது பழைய அணி நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அடுத்து எடப்பாடி ஆட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து கட்டம் கட்டப்பட்ட ஒரே ஒரு நபரான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஓ.பி.எஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்தது, அமைப்புச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகரன் ஓ.பி.எஸ் ஆதரவாளராக மாறி சந்தித்ததும் பரபரப்பானது.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமாதானத் தூதுவர் போல ஓ.பி.எஸை சந்தித்து விட்டு முதல்வர் எடப்பாடியை சந்திக்க ஓடியது, அமைச்சர் தங்கமணியும் நேற்று இரவில் ஓபிஎஸ்சை சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டது எல்லாமே ஓபிஎஸ் பிடிவாதமாக இருப்பதையே உணர்த்துவதாக இருந்தது. இந்நிலையில் இன்று 2-வது நாளாகவும் ஓ.பி.எஸ், தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது, ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதாவது அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கி தனி அணி கண்ட போது தன்னுடன் உறுதுணையாக இருந்த பழைய டீம் நிர்வாகிகளில் முக்கியப் புள்ளிகளான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

அதே வேளையில் 2-வது நாளாக இன்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் ஓபிஎஸ் இல்லம் முன் திரண்டு அடுத்த முதல்வர் ஓபிஎஸ், அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர் என்றெல்லாம் அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி வருவதும் என பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தொடர்ந்து இன்று தேனிக்கு புறப்படவும் ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளாராம். இதனால் அவர் என்ன மாதிரி அதிரடி முடிவை மேற்கொள்ளப் போகிறார் என்பது தான் அதிமுகவில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பி.எஸின் இந்த தடாலடி நடவடிக்கைகள் அனைத்திற்குமே டெல்லி பாஜக தரப்பின் ஆக்கமும் ஊக்கமும் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. பின்னணியில் ’ஆடிட்டர்’ஒருவர் ஓ.பி.எஸை இயக்குவதாகவும், இதனால் கட்சியில் பிளவு ஏற்படுமோ? என்ற அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக அதிமுகவில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் செய்கின்றனர்.