if ypu will kidnap cows will be killed
“இறைச்சிக்காக பசுக்களை கடத்தினால், கொல்லப்படுவீர்கள்’’ என்று ராஜஸ்தான் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பசுக்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், ராம்கார்க் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஜாகீர் கான் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் 8 பசுக்களை கொண்டு சென்றார். இதைப் பார்த்த பசு குண்டர்கள் வாகனத்தை வழிமறித்தனர்.
தீவைப்பு
வாகனத்தில் அமர்ந்திருந்த ஜாகீர் கானை கீழே இழுத்து வந்த பசு குண்டர்களும், அந்த கிராமத்தினரும் அவரை கடுமையாகத் தாக்கினர். இதைப் பார்த்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடினர். மேலும், அந்த வாகனத்துக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்தனர்.
கைது
இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், கூட்டத்தைக் கலைத்து, ஜாகீர் கானை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா அங்கு நடந்த சம்பவத்தை மக்களிடம் கேட்டறிந்தார்.
கொல்லப்படுவீர்கள்
அதன் பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ நீங்கள் பசுக்களை கடத்தி, இறைச்சிக்காக வெட்டினால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். பசு எங்களின் தாய். பசுக்களை கடத்திய ஜாகீர் கானை மக்கள் யாரும் தாக்கவில்லை. மக்கள் அனைவரும் வாகனத்தை துரத்தியதால், பயந்து வாகனத்தை ஓட்டியபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதனால்தான், அவருக்கு காயம் ஏற்பட்டது’’ எனத் தெரிவித்தார்.
சர்ச்சைப் பேச்சு
எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா அவ்வப்போது, சர்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சினையை உண்டாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அவர் பேசுகையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் பாலியல் சம்பவம் அதிகமாக நடக்கிறது, போதை மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. 3 ஆயிரம் ஆணுறைகள்,2 ஆயிரம் மது பாட்டில்கள் அங்கு கண்பிடிக்கப்பட்டன என்று பேசி இருந்தார்.
பதற்றமான ஆல்வார்
ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் அடிக்கடி பசு குண்டர்களால் மாடுகளைக் கொண்டு செல்பவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பெகுல் கான் என்பவர் பசு கடத்தியதாக பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார், நவம்பர் மாதம் உமர் காந் என்பவர் பசு குண்டர்களால் தூப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த மாதத்தில் பசு கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் துரத்திச் சென்றபோது, அதில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
