நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவிகிதம் பணிகள், தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அரசு வேலை சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘’அரசு வேலை அந்தந்த மாநில மக்களுக்கே என்று நான் சொன்னால் பாசிசம், மற்றவர்கள் சொன்னால் நேஷனலிசமாக பார்க்கிறார்கள். இந்தியா என்கிற நாடு இயற்கையாக உருவானது அல்ல, உருவாக்கப்பட்டது. இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அந்தந்த மொழி வழி மக்களுக்கான உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது அரசியல் சாசனம்.

கல்வி, மருத்துவம், சாலை, மின் உற்பத்தி, போக்குவரத்து, வானூர்தி நிலையம், குடிநீர், துறைமுகங்கள், எரிபொருள் விநியோகம் எல்லாமே தனியார்மயமாக்கி விட்ட நிலையில் மத்திய அரசுக்கு நிதி எதற்கு? மாநில அரசுப் பணிகள் அந்தந்த மாநில மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக குரலெழுப்பிக் கொண்டிருக்கிறோம். அதுபோல மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் பணியிடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒதுக்கப்படும் பணியிடங்களில் 90 விழுக்காடு பணிகளை அந்தந்த மாநில மக்களுக்கே கொடுக்க வேண்டும்.மீதமுள்ள பணிகளை வெளி மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கலாம்.

தமிழக ரயில்வே பணிகளில் தேர்வான 700 பேரில், 650 பேர் வெளி மாநிலத்தவர்கள். தமிழ்நாட்டு மின்துறை பணிகளிலும் வட இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர். இந்தி தெரிந்தால் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்று வேறெந்த மாநில முதல்வர்களும் கூறியிருக்கிறார்களா? கர்நாடாகாவில் மாநில மக்களுக்கே வேலைகள் என்று சட்டமியற்றி பல ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 3 கோடி பேர் இந்தியை தாய்மொழியைக் கொண்டவர்கள் வேலையில் இருக்கிறார்கள். இதுவொரு படையெடுப்பு; ஆக்கிரமிப்பு. இந்தியை திணித்தால் எதிர்க்கிறார்கள் என்று இந்திக்காரர்களை திணிக்கிறார்கள்.

கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்புகளை அந்தந்த மாநிலங்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றுதான் மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால் தற்போது மாநிலங்களின் எல்லா உரிமைகளையும் தன்வசம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு துடிப்பது வேடிக்கையானது. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழகத்தில் 20% பணிகளையாவது ஒதுக்குங்கள் என்று அரசிடம் உயர்நீதிமன்றம் சொல்கிறது. 20 விழுக்காடு வேலைவாய்ப்பு கூட, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு இல்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம்?மொழி வழியே தேசிய இனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்தால் மாநில வேலைவாய்ப்புகள் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே என்கிற கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பது புரியும்.

அனைத்து வகையான மத்திய அரசு பணியிடங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி பணியிடங்களுக்கான ஆள் தேர்வுக்கு, ஒரே பொது தகுதி தேர்வு கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.என் தட்டில் உள்ள சோற்றை அனைத்தையும் பிடுங்கிவிட்டு நான்கே நான்கு பருக்கைகளை விட்டுவிட்டுச் சென்றால் நான் என்னதான் செய்ய முடியும்? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசுத்துறை பணியிடங்களில் 90 விழுக்காட்டு பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.