நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் உதயநிதி. நீங்கள் பேசினால் நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமா..? நாங்கள் பேசக்கூடாதா? இனி, எங்கள் தொண்டனே பதிலடி கொடுப்பான்'' என்றார்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று சிவகாசி, அருப்புக்கோட்டையில் பரப்புரை முடித்துவிட்டு பரமக்குடி பபேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினார்.அப்போது அவர், ‘’அதிமுக சார்பில் திருவாடானையில் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி தொகுதிக்கு டாக்டர் முத்தையா, முதுகுளத்தூர் தொகுதிக்கு மலேசியா பாண்டி நிறுத்தப்பட்டுள்ளனர். மூன்று வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

கீர்த்திகா முனியசாமி இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார். அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். முத்தையா முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ. இவர்கள் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள். இரட்டை இலை சின்னத்தில் இவர்களுக்கு வாக்களியுங்கள்.

உதயநிதி என்னைப் பற்றி விமர்சிக்கிறார். மோடியின் முரட்டு பக்தன் எடப்பாடி என்று கண்டுபிடித்திருக்கார். இதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. உங்கள் தாத்தா யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என்று மக்கள் அறிவார்கள். (வாஜ்பாயுடன் கருணாநிதி இருக்கும் போட்டோவை காண்பிக்கிறார்) மத்தியில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு முரட்டு பக்தராக இருந்தவர் இவர்தான்.

எங்களைப் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. உங்கள் தாத்தா காரியத்தோடு தான் டெல்லிக்குப்போவார், மக்களுக்காகப் போகமாட்டார். கருணாநிதி மக்களுக்காக டெல்லி போனதாக சரித்திரம் இல்லை. 2ஜி ஊழல் அமைச்சர், கனிமொழி சிறையில் அடைக்கப்படும்போது யார் காலில் விழுந்தார் என்று மக்கள் அறிவார்கள். நான் 51 ஆண்டு காலம் கட்சியில் இருக்கேன். உங்கள் வயது 48 தான். என் அனுபவம் கூட உங்க வயது இல்லை. வரம்பு மீறிப் பேசினால் அதற்கு பதிலடியை எங்கள் தொண்டன் கூட கொடுப்பான். காற்றில் கூட ஊழல் செய்த திமுகவுக்கு, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் செய்தவர்களுக்கு எங்களைப்பற்றி பேச அருகதை இல்லை.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு மட்டுமே. ஊழல் என்றால் திமுக, ஊழலின் ஊற்றுக்கண் திமுக. இந்த ஐந்தாண்டுகளில் கலெக்‌ஷன் கரப்ஷன் கமிஷன் மட்டும்தான். ராமநாதபுரத்துக்கு என்ன திட்டம் கொண்டுவந்தீங்க? நான் முதல்வராக இருக்கும்போது 400 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தேன். 125 கோடியில் சட்டக்கல்லூரி கொண்டுவந்தேன். இந்த மாவட்டம் பின் தங்கிய மாவட்டம், இந்த மாவட்ட மக்களின் நன்மை பார்த்துக்கொண்டுவந்தோம், அதை திறந்துவைக்கிறது மட்டும் தான் திமுக. இது, வறட்சியான பகுதி. விவசாயிகள் நலமோடு வாழ, காவிரி குண்டாறு வைகை திட்டம் கொண்டுவந்தேன் 14 ஆயிரம் கோடி மதிப்பீடு. ஒரே திட்டத்துக்கு மாநில அரசு இப்படி நிதி ஒதுக்கீடு செய்த சரித்திரம் கிடையாது.

முதற்கட்டமாக நானே புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டினேன். திமுக அரசு தடுத்து நிறுத்தியது. இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி? உண்மையான முதல்வராக இருந்தால் அக்கறை கொண்ட முதல்வராக இருந்தால் இந்த திட்டத்தை முடக்கலாமா? எந்தெந்த திட்டத்தை முடக்கினீர்களோ, அவை எல்லாம் மீண்டும் அதிமுக ஆட்சியில் தொடரும். எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

அப்பாவும் மகனும் சேர்ந்துகொண்டு அடிக்கும் லூட்டி கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் முகம் தான் டிவியில் வரும், அமைச்சர்கள் முகம் வராது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சியில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பில்லை.

அதிமுக ஜனநாயக முறையான கட்சி, கிளைச்செயலாளர் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும். திமுகவில் முடியுமா? கழகம் வலிமையோடு உள்ளது. அதிமுகவை உடைக்க சதி செய்யப்பட்டது. நான் பெரும்பான்மை நிரூபிக்கும்போது அட்டூழியம் செய்தனர், ஆனால் எவராலும் அதிமுகவை அழிக்க முடியாது.

எவ்வளவு வழக்குகள் போட்டனர் அத்தனையும் தூள் தூளாக்கினோம். 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தோம். 5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். கடன் வாங்குவதில் முதல் மாநிலம்.

வருமானம் அதிகமாகிவிட்டது. ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருமானம், ஒரு பக்கம் கடன். ஆனால், பெரிய திட்டமில்லை. கொரோனா காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை; கலால் வரி, வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இருந்தபோதும், கொரோனா காலத்தில் விலைவாசி உயராமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது. அதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது அதிமுக அரசு. உங்க ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை. பிறகு எதற்கு கடன் வாங்குகிறீர்கள்..? நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு.

நாடு வளர்ச்சியடைய கல்வி சிறந்து விளங்க வேண்டும், அதற்கு அதிமுக அரசே சான்று. 2011ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 100க்கு 34 பேர்தான் உயர்கல்வி படித்தனர், கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியதன் விளைவாக, 2019-20ம் ஆண்டில் 100க்கு 54 பேர் உயர்கல்வி படிக்கும் நிலையை அதிமுக அரசு உருவாக்கியது. திமுக ஆட்சியில் பள்ளிகளை மூடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். நீங்கள் நிறைய திறந்துவிட்டதால் அதை நடத்த முடியவில்லை, அதனால் மூடிவிட்டோம் என்கிறார் கல்வி அமைச்சர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக மக்கள் நடமாட முடியவில்லை. சிறுமிகளை பாதுகாக்கும் நிலை வந்துவிட்டது. 2 வயது சிறுமியைக் கூட விட்டுவைக்கவில்லை. விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை. போலீஸ் புகார் எடுக்கவில்லை, பெற்றோரே தேடிக் கண்டுபிடித்த பின்னர்தான் வழக்குப்பதிவு செய்தனர். இதெல்லாம் கஞ்சா போதையில் தான் நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கொலை நிலவரம் செய்திகள் வரும் காலமிது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?525 வாக்குறுதிகளை கொடுத்து நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுக்கவில்லை, கூடுதல் சர்க்கரை கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை.

நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெறவில்லை, ரகசியம் இருக்கிறது என்று உதயநிதி சொன்னார். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு இருப்பதால் நீட்டுக்கு விதிவிலக்கு பெற முடியாது என்று ரகசியத்தை சட்டமன்றத்தில் உடைத்துவிட்டார் ஸ்டாலின். தவறான செய்தியை பரப்பி ஆட்சிக்கு வந்த அரசு. 2010ம் ஆண்டு டிசம்பர் 21 காங்கிரஸ் ஆட்சியில் திமுக அமைச்சர் காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்த காலத்தில் தான் நீட் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டுவந்ததும் எதிர்ப்பதும் அவர்கள் தான். நாட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். நகராட்சித் துறை ஊழலைக் கண்டுபிடித்து அமலாக்கத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய கடிதம் கொடுத்தது. எஃப்.ஐ.ஆர். போடவில்லை, அதிமுக வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் எஃப்.ஐ.ஆர். போடவில்லை, அதிமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பாஜகவுக்கு அடிமையாம். அப்படி என்றால் நீங்கள் ஏன் கூட்டணி வைத்தீர்கள்? ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் கூட்டணி வைப்பார்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சியாம். அப்போதும் அவர்களுக்கு அதே கொள்கைதான், இப்போதும் அதே கொள்கைதான். பிரதமர், தலைவர்கள் தான் மாறினர். கட்சி அப்படியே தான் இருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டார், ஆளுங்கட்சியான பின்னர் வெள்ளை குடை பிடித்தார். எப்படி வேடம் போடுகிறார் என்று பாருங்கள். கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் என்று எல்லா திட்டங்களுக்கும் பிரதமரை வரவழைத்தனர். அப்போதெல்லாம் அந்த கட்சியை மோசம் என்று சொல்லவில்லை. சொன்னால் வழக்கு போட்டுவிடுவார்கள். இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.

ஆனால், அதிமுக யாருக்கும் அடிமையில்லை. அதிமுக தொண்டர் முதல் தலைவர் வரை யாருக்கும் பயமில்லை. என்மீது கூட வழக்கு போட்டனர், ஆனால் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து நிரபராதி என்று வந்தேன். நீங்கள் வாய்தா வாங்குகிறீர்கள். தில்லு திராணி இருந்தால் வழக்குகளை சந்தியுங்கள். அமைச்சர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் உதயநிதி. நீங்கள் பேசினால் நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமா..? நாங்கள் பேசக்கூடாதா? இனி, எங்கள் தொண்டனே பதிலடி கொடுப்பான்'' என்றார்