பேரிடர் காலங்களில் இதுவரை மத்திய அரசு நமக்கு போதிய நிதிஉதவி அல்லது மற்ற உதவிகள் செய்யாமல் இருந்தது, ஆனால் இனிவரும் காலங்களில் சென்னை சந்திக்கப்போகும் பேரிடர்களுக்கு மத்திய அரசின் நிறுவனங்களே காரணமாக இருக்கப்போகிறது என பூவுலகின நண்பர்கள் சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது. 

2015 ஆம் ஆண்டுக்கு முன் எண்ணூர்-பழவேற்காடு சதுப்புநிலத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது, 2015 ஆம் ஆண்டு வெள்ளம் நமக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கும் என்று நினைத்திருந்தோம், ஆனால் 2015க்கு பிறகு சுமார் 667 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் அனேக நிறுவனங்கள் மத்திய அரசின் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் சிலவற்றை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா துவக்கிவைக்கிறார். கொசத்தலையாற்றின் தாங்கும் திறன் 1,25,000 கன அடி, இது கூவம், அடையாறு இரண்டும் சேர்ந்த அளவை விட அதிகம், அதனால் அதில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தினால் சென்னையின் வடக்கு-மேற்கு பகுதிகள் வெள்ளம் சூழல் பகுதிகளாக எப்போதும் இருக்கும். 

அதேபோல் பாரி முனையிலிருந்து திருவொற்றியூர் செல்லும் சாலை கடுமையான கடலரிப்பிற்கு உள்ளாகிவருகிறது, ஆனால் எண்ணூர்-பழவேற்காடு பகுதியில் அந்த அளவிற்கு கடலரிப்பு கிடையாது, அதற்கு காரணம் கடலுக்குள் இருக்கும் மணல் குன்றுகள். இதை அழித்து கடலிலிருந்து 2,000 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து, பழவேற்காடு சதுப்புநிலத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அதானி துறைமுகம் அமைந்தால் சென்னையை காப்பாற்றவே முடியாது. 

 
 
எண்ணூர்-பழவேற்காடு கழிமுகம் சென்னையை பாதுகாக்கும் முக்கியமான சூழல் தொகுதிகள், அவற்றை "காலநிலை சரணாலயமாக" அறிவித்து பாதுகாக்கவேண்டும், இது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க மட்டுமல்ல சென்னையை வெள்ளத்திலிருந்து, புயலிலிருந்து காப்பாற்ற, நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க அவசியம் இதை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.