ஒரு கன்னத்தில் அறைந்தால் அன்புக்காக மறுகன்னத்தையும் பாஜக காட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜக தொண்டர்களுக்கும் இடையே இன்று மோதல் நடந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் அன்புக்காக மறுகன்னத்தையும் பாஜக காட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜக தொண்டர்களுக்கும் இடையே இன்று மோதல் நடந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது பல்வேறு நாடுகளிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது அம்பேத்கரின் சிலைக்கு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினம் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் சமத்துவ நாளுக்கான உறுதி மொழியையும் அவர் ஏற்றார். இந்நிலையில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கோயம்பேட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோயம்பேட்டில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வருவதையொட்டி அக்கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சாலை ஓரத்தில் அக்காட்சியின் கொடிகள், தோரணங்கள் அமைக்கப்பட்டன திருமாவளவனின் வருகைக்குப் பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக பாஜக கொடிக்கம்பங்களும் நடப்பட்டிருந்தது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வந்து சென்ற பிறகு நீங்கள் ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அப்போது அங்கிருந்த பாஜக கொடி கம்பங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் பிடுங்கி வீசி எறிந்தனர்.
பாஜக கொடியினை தரையில் போட்டு மிதித்து பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கு கல்லெறி சம்பவமும் நடந்தது. அதில் பாஜகவினர் 3 பேருக்கு மண்டை உடைந்தது. விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் திருமாவளவன் வருகை தந்து அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பாஜகவினர் வந்து மரியாதை செய்தனர். விடுதலை சிறுத்தைகள் பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற சம்பவம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜக மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடியுள்ளது. கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பிறந்த 21 குழந்தைகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மீது எப்போதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் சில தலைவர்கள் அவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். அண்ணல் அம்பேத்கரை வைத்து தான் அரசியல் செய்ய முடியும் என சில கட்சிகளும் தலைவர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை திருத்த முடியாது. அம்பேத்கரின் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றுகின்ற கட்சி பாஜக கட்சி. ஒருபோதும் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை அன்புக்காக காட்டும் கட்சியாக பாஜக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
