மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையை இரண்டாவது தலைநகரக்க வேண்டும் என்ற நோக்குடன் மதுரை எம்.பி. சு. வெங்கடேஷ் உள்ளார். மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடர்பாக தொகுதி எம்பியான சு. வெங்கடேஷுடன் இந்த அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 
வருகிற 27 அன்று சிறையிலிருந்து வெளிவர உள்ளார் சசிகலா. திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனாலும், அலர் பூரண குணமடைந்து விடுதலையாக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சசிகலா அரசியலுக்கு வந்தால் பாஜக, எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும்தான் ஆபத்தாக முடியும். அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரோ என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழக இளைஞர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. இந்த சூழ்நிலையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது உண்மைக்கு புறம்பானது. பாஜக பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் எதிரி கிடையாது. சமூக நீதி, மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கும் பாஜக எதிரான கட்சிதான்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.