ஆன்மிக அரசியல்! என்று அவரே சொல்லிவிட்ட நிலையிலும், தீவிர பக்தர் என்கிற அளவிலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் அது பி.ஜே.பி.க்கு ஆதரவாகத்தான் இருக்குமென்பது வெளிப்படையான ரகசியம். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சி துவக்காவிட்டாலும் ரஜினியின் ஆதரவு  பி.ஜே.பி.க்குதான்! என்று மேலிடத்துக்கு நோட் வைத்துவிட்டாராம் மத்தியமைச்சர் நிதின் கட்கரி. 

பேட்ட பட ஷூட்டிங்கின் ‘பிளாஸ்பேக்’ ஷூட் ஷெட்யூலுக்காக வாரணாசி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த். சில வாரங்கள் தொடர்ந்து அங்கே தங்கியிருந்தவர் கிட்டத்தட்ட மூன்று முறை மத்தியமைச்சர் கட்கரியை சந்தித்திருக்கிறார். அப்போது முழுக்க முழுக்க அரசியல் பற்றியே பேசியிருக்கிறார் கட்கரியிடம். 

அந்த சந்திப்புகளின் மூலம், கட்சி துவக்குவதில் உறுதியாக ரஜினி இருப்பதை  தெளிவாக தெரிந்திருக்கிறார். கட்சி துவங்கிய பின் அவரது கூட்டணி ஆப்ஷனில் முதலிடத்தில் பி.ஜே.பி.தான் இருக்கிறது என்பதையும் ஸ்மெல் செய்துவிட்டார். இந்த அளவில் கட்கரி செம்ம ஹேப்பி. இதை தங்கள் மேலிடத்துக்கு சொன்னபோது அவர்களும் குஷிதான். 

ஆனால் இதை விட செம்ம குஷியான நியூஸ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார் கட்கரி. அதாவது நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக நாடெங்கிலும் அனைத்து கட்சிகளும் ஃபர்ஸ்ட் கியரை போட்டு மூவ் பண்ண துவங்கிவிட்டன. அதனால் இந்த குறுகிய காலத்தில் ரஜினி கட்சி துவங்க மாட்டார், அவர்  கடந்த டிசம்பரில் சொன்னது போல் அவரது இலக்கு, தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல்தான்.

ஆனால் அதே வேளையில் கட்சியை கிட்டத்தட்ட 90% அளவுக்கு வடிவமைத்து கையில் வைத்துள்ளார் ரஜினி. அதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களே அம்மாடியோவ்! எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆக ஒருவேளை ரஜினி இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை துவக்காவிட்டாலும் கூட அவர் மற்றும் அவரது மக்கள் மன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவு பி.ஜே.பி.க்குதான்! எனும் ப்ராமிஸ்ஸை கட்கரி பெற்று, தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளார்! என்கிறார்கள்.