பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா தகவல் அனுப்பியுள்ளது என என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ள கருத்தை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா, இந்திய தரப்பிலிருந்து இதுவரை பாகிஸ்தானுக்கு எந்தவிதமான தகவலும் அனுப்பப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பிரச்சனை நீடித்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி வருவதுடன் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரவு பகல் பாராமல் இந்திய பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற வன்முறைகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி  காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான கில்கிட் பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை அது சீனாவுக்கு தாரைவார்த்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானை கவனமுடன் இருக்கவும் கில்கிட் பால்டிஸ்தானில் இந்தியாவுக்கே உரிமை உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.  

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் இந்தியாவின் தீ வயர் செய்தி வலைதளத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் காஷ்மீர் உட்பட பல விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியுள்ளது என கூறியுள்ளார். இக் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறுவதுபோல எந்தவித தகவலும் டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்படவில்லை, அவரின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர், இந்திய ஊடக நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியின் செய்தியை நாங்கள் பார்த்தோம்.  இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளார் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என மறுத்துள்ளார். 

மேலும், இது வழக்கம்போல பாகிஸ்தான் அரசாங்கத்தின் உள்நாட்டு தோல்விகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான வேலை எனவும்,  இந்தியாவை தினசரி தலைப்புச் செய்திகளில் கொண்டு வந்து சொந்த நாட்டு மக்களை தவறாக வழி நடத்தும் முயற்சியாகும் என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். மேலும் பாகிஸ்தான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி தவறான தகவல்களை தருவதையும் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். பாக் தேசிய ஆலோசகர் மொயீன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை, தவறானவை, போலியானவை எனக் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் மியான்மர் கடற்படைக்கு ஒரு நீர்மூழ்கி கப்பலை இந்தியா வழங்கும் எனவும் கூறியுள்ளார்.