Asianet News TamilAsianet News Tamil

எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாவிட்டால் தமிழகத்திற்கு தலைவலியாக மாறுவார்கள் - திருமாவளவன்

If do not arrest h.raja and s.v. Sekar they will become headache to Tamil Nadu - Thirumavalavan
If do not arrest h.raja and s.v. Sekar they will become headache to Tamil Nadu - Thirumavalavan
Author
First Published Apr 23, 2018, 10:01 AM IST


கோயம்புத்தூர்

எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் கைது செய்யப்படாவிடில் தமிழக அரசுக்கு தலைவலியாகவும், நெருக்கடியாகவும் மாறுவார்கள் என்று கோயம்புத்தூரில் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில், "தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்திருப்பது நியாயமானது. வரவேற்கத்தக்கது. 

தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட தொடங்கியுள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும்போது கூட தமிழக அரசை அவர் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளார்.

ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? அல்லது அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற சர்ச்சை கிளம்பும் அளவிற்கு ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. 

ஆளுநர் தொடர்ந்தால் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் அதிகரிக்கும். எனவே, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பயணத்தின்போது கருப்புக் கொடி, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வைகோ பிரச்சார பயணத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திசை திருப்ப இது போன்ற செயல்களும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களால் மோசமான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜனதா கட்சியினரின் இதுபோன்ற திசை திருப்பும் முயற்சிக்கு பலியாகிவிடக் கூடாது. 

எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தமிழக காவல் துறை தங்களை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையில் தொடந்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரையும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இல்லையெனில் இவர்கள் தமிழக அரசுக்கு தலைவலியாகவும், நெருக்கடியாகவும் மாறுவார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசும், கர்நாடக அரசும் எடுக்கின்றன. கர்நாடக தேர்தலுக்காக இந்த நிலைப்பாட்டை இவர்கள் எடுத்து தமிழகத்தை வஞ்சிக்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios