தமிழக சட்டப்பேரவையில் பாஜக இடம்பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தை அவர்கள் துவம்சம் செய்துவிடுவார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 நாங்குநேரியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பேசுவதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று திருநெல்வேலி வந்தார். களக்காடு பகுதியில் நடந்த தேர்தல் திருமாவளவன் பேசியது:


“தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி நிர்வாகத்தை  இங்கே இயக்கிவருகிறார். நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகத்தில் நடைபெற்று வரும் பாஜகவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்திவருகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது அவர்களை சமாதானம் செய்து வைத்தவர் மோடிதான். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருக்க சம்மதம் தெரிவித்தது ஏன் என்பது யாருக்க்கும் தெரியாது.


தமிழகத்தில் ஜாதி, மத வெறி பிடித்தவர்களுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் தென்னிந்தியாவில் மட்டும் சாதிக்க முடிய வில்லை. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது. தமிழகத்தில் சமூக பாதுகாப்பு இல்லை. தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மாறாக நடந்தால், திமுகவுக்கு ஆதரவான நிலை மாறிவிட்டது. மோடி- எடப்பாடி கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்ற நிலை இங்கே ஏற்பட்டுவிடும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை மிரட்டி பாஜக 100 தொகுதிகளில் போட்டியிடும். தமிழக சட்டப்பேரவையில் பாஜக இடம்பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தை அவர்கள் துவம்சம் செய்துவிடுவார்கள்.” என்று திருமாவளவன் பேசினார்.