நாம் தமிழர் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் போட்டியிடும் மன்சூரலிகான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மத்தியில் ஆளும் பாஜக வை வீழ்த்த வேண்டும் என்பதே நாடு முழுவதும் நிலவி வரும் ஒரு குரலாக உள்ளது என்றும், மேலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு கண்டிப்பாக தோல்வியே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசை குறை கூறும் காங்கிரஸ் அரசும் நாட்டை ஆள தகுதியற்ற அரசு தான் என்று விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. எங்களிடமிருந்து மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய மாநில அரசுகள் அழித்துவிட்டன.

இதனால் தமிழகத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலன் தற்போது உயிரோடு உள்ளாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிக்கு காணாமல் போன ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் அல்ல... எனவே அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே பொறுப்பு என குறிப்பிட்டு பேசினார் மன்சூரலிகான்.