If any bank employees working in karnataka dont know kannada they will dismissed

கர்நாடகாவில் பணிபுரியும் கன்னடம் தெரியாத வங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் கன்னடத்தை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் ஊரக, சிறுபான்மையினருக்கான வங்கிகளின் தலைவர்களுக்கு கர்நாடக மாநில மேம்பாட்டுக் கழகம் அறிவுரைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில், கர்நாடகாவில் பணிபுரியும் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காத வங்கி ஊழியர்கள் 6 மாதத்துக்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் பணி நியமன விதிமுறைகளின்படி, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களுக்காக நாடு முழுவதும் ஹிந்தி பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

அதைப் போல கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கன்னடப் பயிற்சி மையம் துவங்கப்படும் என்றும் கர்நாடக மாநில மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக அனைத்து வங்கிகளிலும் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு உள்ளூர் மக்களையே அதாவது அந்தந்த மாநில மக்களையே பணியமர்த்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசின் இந்த உத்தரவு மொழி ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.