ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார். அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பான டெண்டர் ஓராண்டுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டு விட்டது. பிறகு எப்படி அந்த டெண்டரில் ஊழல் செய்ய முடியும்? ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள், சந்திக்கலாம், பேசலாம் என்று நான் சொன்னேன். அதற்கு "நீதிமன்றத்திலே வழக்கு இருக்கிறது வாபஸ் வாங்கினால் வருவோம்" என்று கூறுகிறார். இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் செயல். நான் கூறியதைப்போல நீங்கள் வாருங்கள், பேசுங்கள், எது தவறு, சரி என்று சொல்லுங்கள்.


கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் மூலம் பொது வாழ்வில் இருக்கக் கூடிய எம்எல்ஏ, எம்பி, அரசு ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யார், யாரெல்லாம் டெண்டர் எடுக்கக்கூடாது; அரசினுடைய சலுகைகளைப் பெறக்கூடாது என்று ஒரு பட்டியலை மத்திய அரசிடம் வாங்கினார். அதை தெரிந்துகொண்டு ஸ்டாலின் பேச வேண்டும். ஏனென்றால் எதிர்கட்சி தலைவருக்கு ஒன்றுமே தெரியாது. 
எதுவும் தெரியாமல் நாங்கள் டெண்டர் கொடுத்தது தவறு என்று கூறிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். சட்டரீதியாக எங்கள் அரசு செயல்படுகிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை ஸ்டாலின் பரப்புகிறார். நாங்கள் கொடுத்தது இ-டெண்டர். ஆனால், திமுக ஆட்சியில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். டெண்டர் நோட்டீஸ் யாருக்கு வழங்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். யார் வேண்டுமனாலும் பங்குகொள்ளக்கூடிய எங்களுடைய முறை சிறந்ததா? அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே பங்குகொள்ளும் அவர்களுடைய முறை சிறந்ததா? மக்கள் நீங்களே சிந்தியுங்கள்.
மு.க. ஸ்டாலின் குடும்பத்தில் 58 உறவினர்களின் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். கருணாநிதி சென்னை வந்தபோது, திருட்டு ரயில் ஏறி வந்தார் என்பதை நாங்கள் சொல்லவில்லை, கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் வைத்திருக்கும் சொத்து 1943-ம் ஆண்டிலேயே எங்கள் தாத்தா வைத்திருந்த சொத்து. நாங்கள் பரம்பரை விவசாயி. விவசாயியை குறைசொல்லுபவன் என்றைக்குமே முன்னுக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்கப் பார்த்தார். சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவும் முயற்சித்தார். விலைக்கு வாங்கினார், இன்றைக்கு அந்த எம்எல்ஏ நடுத்தெருவில் நிற்கிறார்.
அதிமுக மூன்றாக உடையும் என்று முன்பு ஸ்டாலின் கூறினார். முதலில் உங்கள் கட்சியைப் பாருங்கள். மு.க. அழகிரி கட்சி ஆரம்பித்தால் உங்கள் கட்சி மூன்றாக உடையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். அன்றைக்கு எங்களுக்கு வினை நினைத்தாய், இன்றைக்கு அது உனக்கு நடக்கிறது.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.