21 பேர் லிஸ்ட் ரெடி..திமுகவின் ஊழல் பட்டியலுக்கு கவுன்டவுன் போட்ட பாஜக அண்ணாமலை - திடீர் ட்விஸ்ட்
தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை.
பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார்.
திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்த பட்டியல் தொடர்பாக, திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக கூறி, அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய ஆவர், “பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே நாங்கள் பல குற்றச்சாட்டுக்கள் வைத்திருந்தோம். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு பாராட்டுகிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க..நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!
அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை. நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்? பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவரது தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன்.
அந்த ஆடியோவில் முதல்வரையும் தான் குற்றம்சாட்டி உள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போடுங்கள். இந்த வழக்குகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்று இருந்தது. இனி வெளியிடப்படும் பட்டியலில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேர் பெயர் இடம்பெறும்” என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை.
இதையும் படிங்க..1 மணி நேர ஆடியோ இருக்கு.. பிடிஆர் பாவம்! இன்னொரு வழக்கு போடுங்க பார்க்கலாம் - அண்ணாமலை சவால்