i will obey sasikala orders says karunas

குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவாக தெரிவிக்காமல் மழுப்பிய கருணாஸ், அதிமுக பொது செயலாளர் சசிகலா முடிவுக்கு கட்டுப்படுவேன் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் அதிமுக டிடிவி.தினகரன் தரப்பில், பொது செயலாளர் சசிகலா முடிவுபடி ஆதரவை தெரிவிப்போம் என தெரிவித்து இருந்த நிலையில், நேற்று திடீரென முதல்வர் எடப்படி தலைமையில் கூடிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது என முடிவெடுத்து அறிவித்தனர்.

இதனால், தினகரன் தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வதும், திமுகவுடன் சேர்ந்து கொண்டு பேட்டி அளிப்பதும் தற்போது வாடிக்கையாகி வருகிறது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் அதிமுக கூட்டணி கட்சியினர் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்து, பரபரப்பை ஏற்படுத்தினர். தங்க தமிழ்செல்வனும், வேறு ஒரு பிரச்சனையில் வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில், திடீரென எடப்பாடி தரப்பு தாங்கள், ச்சிகலாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுபோல் காண்பித்து, தங்கள் நிலைய அறிவிக்க தினகரன் தரப்பு நேற்றும், இன்றும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று தினகரனை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் வெளியே வந்தபோது செய்தியளார்களிடம் கூறியதாவது:-

டிடிவி.தினகரன் திகார் சிறையில் இருந்தபோது, அங்கு சென்று அவரை சந்தித்தேன். அதன்பிறகு, நட்புரீதியாக தற்போது, அவரது வீட்டில் சந்தித்தேன். நான் அவருடன் பேசியது, குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பற்றி இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு ஆதரவு அளித்ததை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. என்னை அரசியலில் அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவருக்கு பின்னர், எங்களுக்கு வழிகாட்டி சசிகலா மட்டுமே. அவரது முடிவு தான் எங்கள் முடிவு.

சசிகலா, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களால் தேர்வு செய்து பொது செயலாளர் ஆனார். அவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், 2 பேர் முதலமைச்சர் ஆனார்கள். இதனால், சசிகலாவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

அதிமுகவில் கோஷ்டி விவகாரம் பற்றி எனக்கு தெரியாது. ஒரே கட்சி அதிமுகதான். அதில், உள்ள அணிக்கள் பற்றி நான் பேச தேவையில்லை. எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை.

சட்டமன்றத்தில் இருந்து தோழமை கட்சிகள் வெளியேறியது, மத்திய அரசை கண்டித்துதான். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் தடையை ஏற்க முடியாது. உணவு என்பது தனிப்பட்ட உரிமை. இதை யாரும் தடுக்க உரிமை இல்லை. இந்த தடையை நீக்க வேண்டும். இதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.