எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கன்னட மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது” என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் அமைக்காத நிலையில், கடைசி நேரத்தில் மத்திய அரசு மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராகத் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

ஏப்ரல் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தமிழக - கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்துக்குப் போட்டியாக கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி பெங்களூருவில் உள்ள எஸ்பிஎம் சர்க்கிளில் போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கன்னட மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது” என்று தெரிவித்தார். தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், “ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்” என்று அறிவித்திருந்தார்.

மேலும், காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடக மாநிலத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களைக் கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.