நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் கிருஷ்ணசாமி போன்றவர்களைப் பயன்படுத்தி உண்மையில்லாத கருத்துக்களை அரசு பரப்பி வருவதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவி அனிதா நீட் தேர்வு முறையால், மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மாணவி அனிதா மரணத்துக்கு நீட் தேர்வு காரணம் கிடையாது என்றும், அவரின் இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, டாக்டர் கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கிருஷ்ணசாமி, தன்னுடைய மகள், மருத்துவ சீட் பெறுவதற்கு போதிய மதிப்பெண் எடுக்காததால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும், ஜெயலலிதாவும் அவருக்கு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பாலபாரதி தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்திருந்தார். அப்போது 2015 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் என் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். என்னை சட்டமன்றத்தில் அவர் பார்க்கவேயில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சட்டமன்றத்துக்கு இரு கண்களோடுதானே வந்தார்? அதெப்படி நான் அவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போயிருப்பேன்? என்று கேள்வி எழுப்பினார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கிருஷ்ணசாமியை தூண்டி விடுகிறது. அதனால்தான், அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார் என்றார். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் கிருஷ்ணசாமி போன்றவர்களைப் பயன்படுத்தி உண்மையில்லாத கருத்துக்களை அரசு பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு பொய்யை உண்மையாக்குவது மிக சுலபமாகிவிட்டது. ஆனால் இனி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாலபாரதி கூறினார்.

இந்த நிலையில், மேலும் ஒரு பேஸ்புக் பதிவை பாலபாரதி பதிவிட்டுள்ளார். அதில், டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள் என்றும் ஆனால், அது உண்மை அல்ல என்றும் வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.