2014-ஆம் ஆண்டில் நடிகை குட்டி பத்மினி அன்றைய தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் குட்டி பத்மினி இணைந்தபோதும், கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்படாமலேயே இருந்தார். 

பாஜகவில் நடிகை குட்டி பத்மினி இருந்த நிலையில், அரசியலிலிருந்து அவர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டி பத்மினி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என பிரபலமான நடிகர்களுடன் நடித்தார். கதாநாயகியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், குணச்சித்திர நடிகையாகவே நிலைப் பெற்றார். 1980-களில் ரஜினி, கமல் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தார். பிறகு சின்னத் திரையிலும் முத்திரை பதித்தார். சில சின்னத்திரை தொடர்களையும்கூட குட்டி பத்மினி தயாரித்திருக்கிறார். இந்நிலையில்தான் 2014-ஆம் ஆண்டில் மத்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு, தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் பணிகள் வேகம் பிடிக்கத் தொடங்கின. அந்த அடிப்படையில் திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், பிற கலைஞர்கள் பாஜகவில் சேர்வது அதிகரித்தது. 

அமித்ஷா முன்னிலையில்

அதன்படி 2014-ஆம் ஆண்டில் நடிகை குட்டி பத்மினி அன்றைய தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் குட்டி பத்மினி இணைந்தபோதும், கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்படாமலேயே இருந்தார். அதே வேளையில் யூடியூப் சேனலைத் தொடங்கி, அதில் சினிமா தொடர்பாகவும் பிற விஷயங்கள் தொடர்பாகவும் குட்டி பத்மினி வீட்டியோக்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக பாஜகவில் குட்டி பத்மினி இருந்து வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குட்டி பத்மினி தமிழக பாஜகவுக்கு தலைமைக்குக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அரசியலிலிருந்து விலகல்

அந்தக் கடிதத்தில், “பாஜகவில் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். என்னுடைய சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியல் பணிகளுக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. மேலும் அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பாஜகவின் நலம் விரும்பியாக இருப்பேன்” என்று கடிதத்தில் குட்டி பத்மினி குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் குஷ்பு, காயத்ரி ரகுராம், ராதாரவி உள்பட சிலரை தவிர்த்து பிற நடிகர், நடிகைகள் பெரிய அளவில் கட்சி செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.