திமுகவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என முன்னாள் திமுக எம்.பி, மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

கட்சியிலிருந்து முழுமையாக ஓரம்கட்டப்பட்ட அழகிரி, கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஸ்டாலின், அழகிரி இடையேயான இந்த தேர்தல் நேரத்தில் உச்சம் தொட இருப்பதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள அழகிரி, பல்வேறு தரப்பினருடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 


 
அரசியல் ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு வாய்ப்புகளையும் அவர் பரிசீலித்து வருகிறார். தந்தை பெயரில் ’தலைவர் கலைஞர் திமுக’ என்கிற புதுக் கட்சி தொடங்கும் ஐடியாவும் அதில் ஒன்று. ஆனால் தனிக்கட்சி தொடங்குவதால் ஏற்படும் பொருட்செலவும், மாநிலம் முழுவதும் அலைய வேண்டியிருப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவும் அழகிரியை யோசிக்க வைத்திருக்கின்றன. 

எனவே முழுமையாக கட்சியாக இல்லாமல் பாசறை, பேரவை என ஒரு அமைப்பை தொடங்கலாமா என்ற யோசனையிலும் இருக்கிறார். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தனது அமைப்பை அவருக்கு ஆதரவாக செயல்பட வைப்பது, ரஜினி அணியில் ஆதரவாளர்களை நிறுத்துவது என பல்வேறு ஆலோசனைகள் அழகிரி வட்டாரத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 
 எப்படியாவது ஸ்டாலினை தோல்வி அடையச்செய்ய வேண்டும் என்பதே அழகிரியின் பிரதான இலக்காக இருக்கிறது. திமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரிய பூகம்பமே வெடிக்கும். சீட் கிடைக்காத கோபத்தில் பலரும் அந்த கட்சியிலிருந்து விலகுவார்கள். அவர்களை வைத்து அழகிரி விளையாட்டு காட்டுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘’சட்டசபை தேர்தல் குறித்து ஜனவரி 3ல் மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்னர் கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன். தொண்டர்கள் கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயமாக தொடங்குவேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் மு.க.அழகிரிக்கு தற்போதும் செல்வாக்கு உள்ளது. அவர் திமுகவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் வாக்குகள் சிதறி மாற்று கட்சிகளின் வெற்றிக்கு வழி வகுக்கும். இதனால் திமுகவினர் திகிலடைந்து கிடக்கின்றனர்.