Asianet News Tamil

ஆண்டவரை அசைத்து பார்க்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த கமல்.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!

40 ஆண்டுகாலம் இறைத்து நீர்பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம். 

I will be in politics for the rest of my life... kamal haasan
Author
Tamil Nadu, First Published May 24, 2021, 5:45 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்களை புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கமல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அனைவருக்கும் பதிலடி தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்;- “ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பது. நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுக இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நாம் நினைத்தது தான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது.

திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புக்களை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழிசெய்தது அன்று அவர்களின் ஜனநாயகத்தின் உச்சக்கட்டமாக தெரிந்திருக்கிறது. பிறகு காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறைதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்து கொள்வதில் நான் கட்டிய வெளிப்படைத்தன்மையும், அதை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும், அனைவரும் அறிந்தவை.

தோல்விக்கு பின் அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகம் பாதை செய்யும் செயல். கடமைகைளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாக படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மைய கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய் விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக தண்ணீர் குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. 40 ஆண்டுகாலம் இறைத்து நீர்பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம். 

இதுதான் நம் புலம். இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களமிறங்கிவிட்ட நமக்கு நம் நீர்நிலையை சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படி அல்ல. ஒரிடம் தங்கமாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள். சில நேரம் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்று சுரந்துகொண்டே இருக்கும். ஆனால், மீண்டும் ஊரணியை நம் நீர்நிலையை அவர்கள் அசுத்தப்படுத்த விடமாட்டோம் எனும் உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையாக தொடர வேண்டும். அதுவே நம் தரும் செய்தியாக உலகம் அறிய வேண்டும். மற்றப்படி தன் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில்சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும்.

உண்மை எல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்க சொல்கிறீர்களா என வெகுண்டு குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே உண்மை பேசு. ஊரவே வாதாடு. என்னறுமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாத இருக்கட்டும். நம் தரம் குறையாத இருக்கட்டும். கட்சி உட்கட்டமைப்பை தனி மனிதர்கள் தன் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள். நம் கொள்கையில் என்றும் போல் தெளிவும் பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராறும் தடுக்க முடியாது. என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்... அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios