ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது ஒரு தந்தையாக எனக்கு மன வேதனை அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது ஒரு தந்தையாக எனக்கு மன வேதனை அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக வன்முறையை செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் வகையிலும், ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இது பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு பள்ளிக்கூட மாணவன் ஆசிரியரை தாக்குவதற்கு பாய்வது போன்ற ஒரு வீடியோ வைரலானது, இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு மாணவன் பள்ளிக்கூட ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியானது. இது அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கையை கேள்வி எழுப்பியுள்ளது. அரசு பள்ளிகளின் நிலை இதுதானா, மாணவர்கள் ஆசிரியர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்ற கேள்வியையும், அரசு பள்ளிகள் மீதான மதிப்பீட்டை குறைக்கும் வகையிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலீட்டாளர்கள் முகவரியாக தமிழ்நாடு உள்ளது என்றார். முதலீடுகளை ஈர்ப்பதில் 14-ஆவது மாநிலமாக இருந்த தமிழகம் இப்போது 10 மாநிலங்களில் முதல் மாநிலமாக இருக்கிறது என்றார். எப்போதும் முதலீடுகளைக் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் மாநிலம் தமிழகம் உள்ளது என்றார். வருங்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கற்பிக்க கவனம் செலுத்தப்படும் என்றார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவுகள் வரும் என்றார்.

அதேபோல் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக தவறான செயல்களில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை எண்ணி இரண்டு குழந்தைகளின் தந்தையான வேதனைப்படுகிறேன். இந்த கொரோனா காலத்தில் ஆசிரியர்களை இரண்டாவது அன்னையாக மாணவர்கள் பார்க்க வேண்டும். ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக மட்டுமல்ல, இரு குழந்தைகளின் தந்தையாக மன வேதனை படுகிறேன் என்றார். கொரோனா தொற்றுக்குப் பின்னர் மாணவர்கள் மத்தியில் மன ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு தங்கள் கடமை என்றார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
