ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியில் சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அந்த ஒற்றை தலைமை யார் என்பது பற்றி நான் பேசவே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியில் சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அந்த ஒற்றை தலைமை யார் என்பது பற்றி நான் பேசவே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையாக வெடித்ததற்கு ஜெயக்குமாரே காரணமென ஓ. பன்னீர்செல்வம் ஆதங்கம் தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது. ஆனால் இரட்டைத் தலைமையின் கீழ் இதுவரை சந்தித்த தேர்தல்கள் அனைத்திலுமே அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு இரட்டை தலைமையைம் ஒரு காரணம் என்ற அதிருப்தி அதிமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றை தலைமையே அவசியம் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுகவினர் மத்தியில் தீவிரமான இருந்து வருகிறது. எனவே இதை சாதமாக பயன்படுத்தி எதிர் வரும் பொதுக் குழுவில் ஓற்றைத் தலைமை என்ற முழக்கத்தை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் காய்நகர்த்தி வருகின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், இரட்டை தலைமையில் கீழ் கட்சி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திடீரென ஒற்றை தலைமை கோரிக்கை வர காரணம் என்ன என்று தெரியவில்லை? இது எனக்கு குழப்பமாகவே இருக்கிறது, ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார். ஓபிஎஸ்சின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் இன்று விளக்கமளித்துள்ளார். 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஒற்றை தலைமை விவகாரத்தைப் பொறுத்தவரை கட்சியிலுள்ள தொண்டர்கள் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரின் மத்தியிலும் உள்ள ஒரு கருத்து ஆகும்.
அனைவர் மத்தியிலும் அந்த எண்ணம் இருக்கிறது, அது குறித்து தான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, அதன் காரணமாகத்தான் நான் வெளியில் வந்து அதைத் கூறினேன். ஒரு கட்சியின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் என் நோக்கம், அதை தான் நான் வெளியில் கூறினேன், மாறாக எனக்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை, ஒற்றை தலைமை வேண்டும் என்றுதான் கூறினேன், யார் அந்த ஒற்றை தலைமை என்று நான் கூறவில்லை, ஓபிஎஸ்சை சசிகலாவை போல ஓரங்கட்டும் எண்ணம் கட்சியில் இல்லை, கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

தற்போதைய சூழலில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது, விரைவில் இதில் சுமூகமான தீர்வு எட்டப்படும், நான் சிறையில் இருந்து வீட்டுக்கு வந்தபோது இருவருமே என் வீட்டிற்கு வந்தனர். அதேபோல் இருவரும் என் வீட்டுக்கு வந்தால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். மாநிலங்களவை சீட் எனக்கு வழங்காததால் தான் நான் இப்படி பேசுவதாக கூறும் கருத்துக்கள் பொய்யானது, என்றும் பதவிக்காக ஆசைப்படுபவன் நான் அல்ல, இவ்வாறு அவர் கூறினார்.
