மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது என அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

வடசென்னையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘’மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது தேவையற்ற செயல். வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்கள் தமிழை கற்றுக்கொண்டு வரவில்லை. எனவே அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலம் மொழி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்து மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு மக்களை நடுரோட்டில் நிறுத்தி வருகிறது மத்திய அரசு. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அனைத்துமே மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டு வருகின்றன. ஓட்டு எந்திரம் மூலம் பல்வேறு முறைகேடுகளை செய்து அவர்களுக்குத் தேவையானவர்களை தேர்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார். ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பி.எஸுக்கு தெரியவில்லை. இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும்போது வெளியிடுவேன்.

வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு இயந்திரம் முற்றிலுமாக நீக்கப்பட்டு ஓட்டுச்சீட்டு முறைதான் வரும். இதை எதிர்க்க தைரியமும் தெம்பும் சசிகலாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு வேறு யாருக்கும் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன்’’என அவர் தெரிவித்தார்.