கலைஞரின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம்.? நான் கோபாலபுரத்து விசுவாசி- துரைமுருகன்
கோபாலபுரம் வீட்டிற்கு நான் சென்றபோது ஸ்டாலின் சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று மிரட்டுவோம். ஓடிப்போய் விடுவார். பிறகு தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி, இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பாக வேலூரை அடுத்த காட்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்று நிதிநிலை அறிக்கை குறித்து பேசினர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் நிறைவேற்ப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும், புதிய திட்டங்களையும் பட்டியலிட்டார். காட்பாடி பகுதியில் அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் வழக்குகளும் அதிகளவில் வருவதால் காவல்நிலையத்தில் சமாளிக்க முடியவில்லையென உயர் காவல் அதிகாரி என்னிடம் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை மானிய கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் ஒரு துண்டுச் சீட்டில் காவல்நிலையம் தொடர்பாக கோரிக்கயை எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப் பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
என் ஜாதி தெரியாது
மகளிர்களுக்கு உரிமை தொகை ஆயிரம், பொண்ணுக்கு உயர்கல்வி படிக்க ஆயிரம் கொடுத்தாச்சு! இலவச பஸ் விட்டிருக்கோம்... போர் அடிச்சா பஸ் ஏறி ஆற்காடு போங்க. அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறி குடியாத்தம் போங்க. யாரு என்ன கேட்கப் போகிறார்கள்? இதேபோல 23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள நட்பை பற்றி பேசினார். 1962-ல் இருந்து கலைஞருடன் நான் பழகி வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், 1971 ஆண்டு வரை அவருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது. அப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்குள் இருந்தது. அப்பேற்பட்டவர் கலைஞ,ர் கருணாநிதி,
கோபாலபுரத்து விசுவாசி
கலைஞர் கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம் வீட்டிற்கு நான் சென்றபோது ஸ்டாலின் சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று ஸ்டாலினை மிரட்டுவோம். பயந்து ஓடிப்போய் விடுவார். பிறகு தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி, இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருக்கிறார். அவரை நான் தலைவனாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். என்னை வளர்த்தவர், அத்தகைய தலைவனின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம்? அதைத்தான் நான் சொன்னேன் கோபாலபுரத்து விசுவாசி என்று, அதை சொல்லுகிற தைரியம் எனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரையில் அப்படித்தான் இருப்பேன் என துரைமுருகன் தெரிவித்தார்.