I had given a 30 page Note to Authorities on MKs and daughter frauds Why no raids yet said subramaniam swami
வியாழக்கிழமை இன்று தமிழகத்தையே உலுக்கி எடுத்த நிகழ்வு, சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைதான்! இந்த சோதனைக்கு பலர் பலவிதமான காரணங்களைக் கூறினாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தினகரன் ஆதரவாளர்களும் திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் உறுதியிட்டுச் சொன்னாலும் இந்த சோதனை நடவடிக்கைக்கான காரணமாக போலி நிறுவனங்கள் தொடங்கி நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு செய்ததைத்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்னார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. போலியான பெயரில் இல்லாத நிறுவனங்கள் பல துவங்கி, அவற்றின் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் சசிகலா என்பது குற்றச்சாட்டு. இதை முன்னிட்டே இந்த சோதனைகள் நடத்தப் பட்டன.
முன்னர் சசிகலாவுக்கு எதிராக கருத்துகள் கூறி வந்து, நீதிமன்றத்தில் வழக்கு போடக் காரணமாக இருந்து, எதிர்த்து வழக்கை நடத்தியவர் சுப்பிரமணியம் சுவாமி. அவர் இப்போது பாஜக.,வில் இருக்கிறார். அண்மைக் காலமாக அவர், தனது நிலையினை மாற்றிக்கொண்டு, சசிகலாவுக்கு ஆதரவாகவும், தினகரன் தரப்புக்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி, தீவிர விசுவாசி லெவலுக்குச் சென்று விட்டார். அடிக்கடி, சசிகலா, தினகரன் ஆகியோரை முன்னிலைப் படுத்தி ஆதரவாக கருத்துகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்து வருவார்.
இன்று வருமான வரி சோதனைகள் நடைபெற்ற நிலையில், அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், சசிகலா குறித்த தகவல்களை நான் நீதிமன்றத்தில் கொடுத்த போது, 30 பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டையும் உரிய அதிகாரிகளுக்கு அளித்தேன். அதில், மு.கருணாநிதி அவரது மகள் (கனிமொழி) ஆகியோரின் முறைகேடுகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். ஏன் அவர்கள் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப் படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் மூலம், ரெய்டுக்குக் காரணம் தானும் என்பதை சொல்லாமல் சொல்லி, கனிமொழியை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் சு.சுவாமி.
