எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத்தொடங்கி விட்டனர். அதன்படி மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அக்கட்சிக்கு தமிழகத்தில் அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பரப்புரையில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான். மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும். ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தந்தால் வாங்காமல் ரூ.5 லட்சமாக கேளுங்கள். நான் பணம் தரமாட்டேன். நான் வெற்றி பெற்றால் இதே சிவகாசி சாலையில் அங்கபிரதட்சணம் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், '’புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.