எனக்கு முன்னால் இருக்கும் தொண்டர்களை நம்பி தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது அக்கசிட்யினரையே வருத்தம் அடைய வைத்துள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்தவும் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் எதிர்கட்சிகள் அனைத்தும் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஒரு முயற்சி நடைபெற்று வருகிறது. தி.மு.கவுடன் இணைந்து செயல்படுவது பற்றி நாம் தமிழர் கட்சியும் யோசிக்க வேண்டும் என்று சிலர் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். 

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் சீமான் எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த கருத்துகளை சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூட்டணி குறித்து எழுதி வருகின்றனர். அதாவது தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சீமான் யோசிக்க வேண்டும் என்று அவரது கட்சியினரே பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

அந்த கூட்டத்தில் பேசிய சீமான், தான் தேர்தலில் யாரையும் நம்பி நிற்கவில்லை என்று கூறுகிறார். மேலும் தனக்கு எதிராக பெருங்கூட்டம் இருக்கிறத என்கிற துணிவிலும் தான் அரசியலில் ஈடபடவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். மேலும் தன்னை நம்பி மட்டுமே தான் அரசியலில் இருப்பதாகவும் சீமான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

தி.மு.க.வுடன் சேர்ந்தால் தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று சிலர் கூறுவதை தான் ஏற்கப்போவதில்லை என்றும் சீமான் அந்த வீடியோவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யாருமே இல்லை என்றாலும் தனியாக கூட தான் பா.ஜ.கவை எதிர்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சீமான் தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவிட்டாலும், தொண்டர்களை நம்பி தான் கட்சி நடத்தவில்லை என்கிற ரீதியில் பேசியிருப்பது அவரது தொண்டர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.