தான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை என்றும், அந்தப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எச்சரித்தார்.
பீஸ்ட் படத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை என்றும், அப்படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விடுதலைச் சிறுத்தைகள்- பாஜக இடையே நடந்துள்ள மோதல் மிகுந்த மன வருத்தமளிக்கிறது என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பீஸ்ட், இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது, இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இப்பட்த்தை கண்டித்து வருகின்றன. இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தேசிய முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை என்றும், அந்தப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தேமுதிக முதல் ஆளாக களத்தில் நிற்கும் என்றார்.

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி இருக்கும் நிலையில் 21 மாவட்டங்களில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார். ஆளுநர் புத்தாண்டு தேனீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளனர், அது அவர்களின் உரிமை, ஆனால் தேநீர் விருந்துக்கு தேமுதிகவுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்றார். கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது போல, தற்போதும் இருக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றார். அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக-பாஜக இடையே ஏற்பட்ட மோதல் பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது. இதுபோல் தலைவர்களின் பிறந்த நாள் அன்று மரியாதை செலுத்துவதில் மோதல் ஏற்படுவது தலைவர்களுக்கு அவமரியாதையை கொடுக்கும் செயல் என்றும் அவர் கூறினார்.
