அருவாளை எடுத்து ஆத்திரம் தீர வெட்டித்தள்ளிட்டு! அப்புறமா ஐ.சி.யு.வுல இருக்குறவனை ஆரஞ்சுப்பழம் வாங்கிட்டு பார்க்க வந்தால் ஏத்துக்க முடியுமா? போலீஸு அந்த கிரிமினலை அள்ளிட்டுப் போயி பொங்கல் வெச்சுடாது! இதே கதைதான் நடந்து வருகிறது ஹெச்.ராஜாவின் லேட்டஸ்ட் ரவுசு @ பெரியார் சிலை விவகாரத்தில்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று ஹெச்.ராஜா ஏவிவிட்ட ஏவுகணைகள் விடிய விடிய தமிழகத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் மட்டுமல்லாது காங்கிரஸும் இதற்கு மிக கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஹெச்.ராஜா மீது பல வகையான கடுப்பிலிருக்கும் அவரது கட்சியை சேர்ந்த பிற தலைவர்கள் கூட இதுதான் வாய்ப்பு என்று சொல்லி ஹெச்.ராஜாவை வெச்சு செய்ய துவங்கியுள்ளதாக தகவல்கள்.இந்நிலையில் பி.ஜே.பி.யின் தேசிய தலைவரான அமித்ஷா இந்த விவகாரம் குறித்து கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகம் தனது முகநூல் பதிவிவால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் தலைநகர் டெல்லியில் போய் இறங்கியிருக்கிறார் ஹெச்.ராஜா. அங்கே செய்தியாளர்களை சந்தித்தவர் ”அந்த பதிவை நான் செய்யலை. என்னோட அட்மின் தான் செய்திருக்கிறார். நான் விமானத்தில்  இருந்தபோது என்னுடைய கவனத்துக்கே வராமல் இது நடந்துள்ளது.

எனக்கு விஷயம் தெரிந்ததும் அந்த பதிவையும் நீக்கிவிட்டேன், அட்மினையும் நீக்கிவிட்டேன். இருந்தாலும் என் முகநூலில் அப்படியொரு பதிவு உருவானதற்காக நான் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிலை உடைப்பு என்பது ஏற்புடையதல்ல!” என்று செம்ம கூலாக ஐஸ்மோர் பேட்டியை தட்டினார்.

ஆனால் ‘இந்த டகால்டியெல்லாம் எங்ககிட்ட வேணாம். உங்க முகநூல்ல வர்ற எல்லா கருத்தும் உங்க அட்மினோட கருத்தா? யாரு அவரு, பெயரென்ன, இவ்வளவு நாளா ஏன் அவரைப்பற்றி சொல்லலை? அப்போ உங்களுக்கு சுயமா சிந்திக்க தெரியாதா! இத்தனை நாளா வைரல் வார்த்தைகள் பேசுன பெருமையெல்லாம் அவருக்குதானா?’ என்று போட்டுப் பொளந்து கேள்விகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் டெல்லியில் பேசியிருக்கும் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ‘ராஜா கூறியிருந்தது ஏற்புடையதல்ல. அந்த விவகாரத்துக்கு விளக்கம் தந்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்!” என்று நைசாக கோர்த்து விட்டுள்ளார்.

மற்ற கட்சியினர் தனக்கு மண்டகப்படி நடத்துவதில் கூட ராஜாவுக்கு கவலையில்லை. அவர் விரும்பியதும் அதைத்தான். ஆனால் சொந்த கட்சியினரே சூனியம் வெச்சு விடுவதுதான் அவரை கடுப்பாக்கி இருக்கிறது.