i can dissolve government in one second says sasikala

என்னவோ தன்னை அ.தி.மு.க.வின் சபாநாயகர் போல் நினைத்து எல்லா அணிகளுக்குள்ளும் ஆஜர் போட்டு அலப்பரையை கூட்டி வருகிறார் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை. 

இவர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த விஷயம் தெரிந்ததே. சிறையில் சசிகலாவை சந்தித்ததை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாக மீடியாவிடம் சொன்னார் த.துரை.

ஆனால் ’இந்த விளக்கெண்ணெய் விளக்கத்தை யாரும் நம்ப தயாரில்லை. வீடியோ ஆதார விவகாரம் போட்டு புரட்டுது. இது சம்பந்தமா பேசபோயிட்டு, வெளியில வந்து ரீல் விடுறார்.’ என்று எதிர்கட்சிகள் துரையை நோக்கி விமர்சனங்களை தூக்கிப்போடுகின்றனர். 

நாம பேசப்போறது இது இல்லீங்கோ! அதுக்கும் மேல.

அதாவது சசியை சிறையில் முதலில் சந்தித்தது தம்பிதுரைதான். அப்போது ’சின்னம்மா நீங்க சொன்னபடிதான் எல்லாம் போயிட்டிருக்குது. ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் எல்லாரும் இப்போ தேவையில்லாம எதையும் பேசுறதில்ல. கட்சி அமைதியா போயிட்டிருக்குது. உங்களுக்கு எதுவும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.

இந்த சரவணன் எம்.எல்.ஏ. விவகாரத்தால சபையில கொஞ்சம் குழப்பம். அதை சீக்கிரம் சரி பண்ணிடலாம். அப்புறம் அந்த குடியரசு தலைவர் தேர்தல் விஷயத்துல...” என்று சசியை கூல் பண்ணும் விதமாகவே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். சசியும் உள்ளூர நிம்மதியுடன் அவரிடம் அமைதியாகவே பேசியபடி இருந்திருக்கிறார். 

இந்நிலையில்தான் தினகரன் டீம் உள்ளே எண்டர் ஆகியிருக்கிறது. தனது மனைவி அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருடன் உள்ளே நுழைந்த மிஸ்டர் கூல் தினகரன் தம்பிதுரையை வெறித்துப் போய் வெறுப்பாய் பார்த்திருக்கிறார் முதலில்.

தம்பிதுரை லேசாக பம்ம, “சபாநாயகர் சார் என்ன சொல்றாரு சித்தி? கட்சி கனகச்சிதமா நடக்குது, குடியரசு தலைவர் தேர்தல்ல பேசாம நம்மாளுங்களேயே வேட்பாளராக்கலாம்னு சொல்றாரோ?” என்று எடுத்த மாத்திரத்தில் நக்கலும், நய்யாண்டியுமாய் பாய்ந்திருக்கிறார். 

ஒண்ணும் புரியாத சசி, “ஏம்பா?” என்று வினவ, வீடியோ ஆதார விவகாரத்தால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை களேபரங்களையும் சுருங்கப் பட்டியலிட்ட தினகரன் “டி.வி.யிலேயும், பேப்பர்லேயும் வர்றதைதான் நீங்க பார்க்குறீங்க சித்தி. ஆனா வெளியில தெரியாம பெரிய ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறாங்க.

ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணியெல்லாம் மீடியாட்டம் இப்போ உங்களையும், என்னையும் பத்தி பேசுறதில்லைதான். ஆனா கட்சிக்காரங்கட்ட நம்மளை மோசமாதான் விமர்சிக்கிறாங்க. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அந்த மாவட்ட அமைச்சரே முதலமைச்சர்ங்கிற மாதிரிதான் நடவடிக்கை இருக்குது.

புரட்சித்தலைவருக்கு முன்னாடியே இந்த கட்சியை என்னமோ எடப்பாடி துவக்கிட்ட மாதிரி எங்கே பார்தாலும் அவரோட போட்டோக்கள்தான். திருச்சியில அமைச்சர் வளர்மதி வீட்டு கல்யாண நிச்சயதார்த்தம் நடந்திருக்குது. அதுல உங்க படமெல்லாம் மருந்துக்கும் கூட கிடையாது.

அம்மா படத்தையே வீதி வரைக்கும் வெச்சுட்டு, வளாகத்துக்குள்ளே அனுமதிக்கலை. ஆனா எங்கே பார்த்தாலும் எடப்பாடியார்தான் ஜொலிக்கிறார். இவங்கள்ளாம் ஏன் எடப்பாடியாரை தூக்கி கொண்டாடுறாங்கன்னு நமக்கு தெரியாதா? முதல்வரோட கருணை இருந்தால்தான் அவங்கவங்க துறையில கிடைக்க வேண்டிய ஆதாயங்கள் தடையில்லாம வந்து சேரும் அதான். 

இஃப்தார் நோன்பு நடத்துறாங்க அதுலேயும் நமக்கு மரியாதை இல்லை. ‘தலைமை கழகத்துக்குள்ளே தினகரன் காலடி எடுத்து வைக்க நினைச்சா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” அப்படின்னு ஒரு சீனியர் நிர்வாகி சபதம் போட்டிருக்கார். அவர் யாரு, என்னான்னு எனக்கு முழு தகவலும் வந்துடுச்சு. ஒரு காலத்துல பொதுக்குழுவுக்குள்ளே கூட அனுமதி கிடைக்காம, கேட் வாசல்ல போலீஸ்காரர்கிட்ட கெஞ்சி, கூத்தாடு மனுஷன் இன்னைக்கு உச்சத்துல போயி உட்கார்ந்துகிட்டு நம்மையே அசிங்கப்படுத்துறார். 

வீடியோ ஆதார பிரச்னையில தி.மு.க. சக்கை போடு போடுது. நல்லாவே ஸ்கோர் பண்ணிட்டாங்க. இன்னைக்கு நம்மோட கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு பண்ற அளவுக்குதான் நிலைமை போயிருக்குது. 

மக்கள் நம்ம மேலே அதிருப்தியடைய ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா அமைச்சர்களுக்கு, முதல்வருக்கும் இதைப்பத்தி எந்த அக்கறையுமில்லை. குடிதண்ணீ பிரச்னை, டெல்டாவுல விவசாய பிரச்னைன்னு போயிட்டிருக்கிற நேரத்துல திருச்சியில அமைச்சர் வீட்டு விசேஷம் ஏதோ மைசூர் மன்னர் குடும்பத்து பங்ஷன் மாதிரி நடக்குது.

இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணினா மக்கள் எப்படி மதிப்பாங்க நம்மளை? நான் சொல்றதெல்லாம் உண்மையா இல்ல பொய்யான்னு இவர்ட்டயே கேளுங்க.” என்று தம்பி துரையை கைகாட்டியிருக்கிறார். 

சசிகலா ஆத்திரம் பொங்க அவரைப்பார்க்க, தம்பிதுரை தலையை சற்று குனிந்து கொண்டாராம் ”என்னங்க நடக்குது அங்கே? ஆனா நீங்க என்கிட்ட வேற ரிப்போர்ட் கொடுக்குறீங்க. என்ன தம்பிதுரை சார் பழசெல்லாம் மறந்து போச்சா உங்க எல்லாருக்கும். உங்களையே எடுத்துக்குங்க, செந்தில்பாலாஜி ஆட்டம் தாங்க முடியலை, எனக்கு கரூர் மாவட்டத்துல எந்த மரியாதையுமில்ல. அவரை கொஞ்சம் தட்டி வையுங்க சின்னம்மான்னு வந்து நின்ன காலமெல்லாம் போன பிறவியில்ல, இந்த பிறவிதான். 

எடப்பாடியார், மற்ற அமைச்சர்களெல்லாம் என்னதான் நினைக்கிறாங்க. அது எப்படி, அக்காவுக்கு உறுதுணையா இருந்து நான் ஸ்திரப்படுத்துன கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள்ளே எங்க வீட்டுப் பையன் காலை வைக்க கூடாதோ? அவன் இந்த கட்சியோட துணைப்பொதுச்செயலாளர். ஞாபகம் இருக்கட்டும். 

எல்லாரும் என்ன நினைச்சு இப்படி ஆடுறாங்க? ஆட்சி, அதிகாரம் கையில இருக்குன்னுதானே! ஒரு நொடியில ஆட்சியை கலைச்சுடுவேன். எல்லாரையும் சாதாரண தொண்டனாக்கி உட்கார வெச்சிடுவேன். உண்மையான விசுவாசிங்களை வெச்சு மறுபடியும் கட்சியை எப்படி மேலே கொண்டுவரணும்னு எனக்கு தெரியும்.” என்று தகித்துக் கொட்டியிருக்கிறார். 

இதில் வியர்த்தேவிட்டதாம் தம்பித்துரைக்கு. பின் அவர் சுதாரித்துக் கொண்டு “நான் போயி பேசி எல்லாரையும் கட்டுக்குள்ளே வைக்க சொல்றேன். அதே நேரத்துல சாரோட (தினகரன்) அணியை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் நேத்து தி.மு.க. முக்கியஸ்தர்களிடம் சட்டசபை வளாகத்துக்குள்ளே நின்னு அரட்டையடிச்சதை என்னான்னு விசாரிங்க.” என்று போட்டுக் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டார்.

அதே ஆத்திரத்தோடு சசி, தினகரனை பார்க்க “இல்ல சித்தி தங்கம் தன்னோட தொகுதி விஷயமா கேள்வி கேக்குறதுக்கு சபாநாயகர் வாய்ப்பே தரலையாம். அதுல கடுப்பாகி வெளியேறிட்டார். பிறகு தி.மு.க. ஆளுங்கதான அவர்கிட்ட வலிய்போயி பேசியிருக்காங்க.” என்று விளக்கம் கொடுக்க...

“நான் தான் ரெண்டு மாசம் அமைதியா இருன்னு சொன்னேன்ல. உங்க ஆளுங்களையும் அப்படி இருக்க சொல்லு.” என்றபடி அடுத்தடுத்த விவாதங்களில் மூழ்கியிருக்கிறார். 

பரப்பன அக்ரஹாராவுக்குள் சசி ஆடிய தாண்டவத்தை அப்படியே எடப்பாடி அண்ட்கோவின் காதுகளுக்கு பாஸ் செய்த தம்பிதுரை ‘எல்லாரையும் கொஞ்சம் இறுக்கிப் பிடிங்க.’ என்கிற ரீதியில் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.