முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஓபிஎஸ் திட்டம் தீட்டி வருவது நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா வசம் இருந்த அதிமுகவை இரண்டாக உடைத்தவர் ஓபிஎஸ். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரது தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுக எடப்பாடி தலைமையின் கீழ் செயல்பட ஆரம்பித்தது. பிறகு ஓபிஎஸ் – இபிஎஸ் சமாதானமாகி ஒன்றாக இணைந்து தற்போது செயல்பட்டு வருகின்றனர். சமாதானப்படலத்தின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் செயல்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்பதால் கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஓபிஎஸ் நினைத்தார்.

ஆனால் முதலமைச்சர் பதவியின் அதிகாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். இடைத்தேர்தல் வேட்பாளர் முதல், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வரை எடப்பாடி பழனிசாமியின் விருப்பங்கள் தான் அதிமுகவில் நிறைவேறியது. இதே போல் நிர்வாகிகள் நியமனத்திலும் கூட ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டு ஈபிஎஸ் தான் ஆதிக்கம் செலுத்தினார். இருந்தாலும் ஓபிஎஸ் அனைத்தையும் சகித்துக் கொண்டு கட்சியை நடத்தி வந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடிக்கு செக் வைத்தார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமியைமுதலமைச் சர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்பதில் ஓபிஎஸ் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார். இது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பல முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவிலும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு டென்சனில் இருந்தது என்றே சொல்லலாம். இதற்கிடையே திடீரென அதிமுக தலைமையகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டம் கூட்டப்பட்டதே அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யத்தான்.

வழக்கம் போல நேற்றைய கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துபிரச்சா ரத்தை துவக்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அப்படி என்றால் அண்ணன் ஓபிஎஸ்சை பொதுச் செயலாளராக கட்சியில் அமர்த்த வேண்டும் என்று பேசியுள்ளனர். இதன் மூலம் உனக்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவி வேண்டும் என்றால் எனக்கு அதிமுக பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் வெளிப்படையாகவே நிபந்தனை விதித்தது போன்ற சூழல் உருவாகியுள்ளது.

அத்துடன் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி வந்திருப்பதும் தெரியவருகிறது. இதுவரை முதலமைச்சர் வேட்பாளர் என்கிற ஒரு கான்செப்ட்டே வேண்டாம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்று கூறி வந்தவர் ஓபிஎஸ். ஆனால் அவர் தற்போது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முன்வந்திருப்பது பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றும் நோக்கத்துடன் தான் என்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதிமுக வென்றால் மீண்டும் எடப்பாடி முதலமைச்சராகலாம், இல்லை என்றால் அவருக்கு என்ன எதிர்காலம் என்று யாரும் கணிக்க முடியாது.

ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட்டால் அதிமுக தேர்தலில் தோற்றாலும் கூட அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஓபிஎஸ் அரசியல் செய்ய முடியும். அவருக்கு எதிர்காலம் இருக்கும். இதேபோல் அதிமுக வென்று எடப்பாடி மீண்டும் முதலமைச்சர் ஆனாலும் கூட பொதுச் செயலாளர் எனும் அதிகாரமிக்க பதவியை கொண்டு அவருக்கு குடைச்சல் கொடுக்க முடியும். எனவே பொதுச்செயலாளர் பதவி கிடைத்தால் போதும் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க ஓபிஎஸ் தயார் என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விவாதிக்கவே பொதுக்குழுவை கூட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா சூழல் உள்ளதால் பொதுக்குழுவிற்கு பதில் முதற்கட்டமாக செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. வரும் 29ந் தேதி நடைபெறும் செயற்குழுவில்அதிமுகவில் அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம்.