பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளான ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இருவருக்கும் தங்கள் கூட்டணியின் தலைவனான அ.தி.மு.க. மீது அப்படி என்னதான் கோபம் என தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக கூட்டணிக்குள் குந்த வைத்துக் கொண்டே ஆளுங்கட்சியை விரட்டி விரட்டி வெளுத்து வருகின்றனர். ’2021 தேர்தலில் நம் கட்சி ஆட்சியமைக்கும். அதன் பின் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று அன்புமணி சில வாரங்களுக்கு முன் சொன்ன பஞ்சாயத்தே இன்னும் தீரவில்லை. அதற்குள், பா.ம.க. வடக்கு மண்டல செயற்குழுக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தபோது, அதில் “வரும் 2021 ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைப்பதற்கு வசதியாக எழுபது முதல் எண்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.” என்று ராமதாஸ் பேசியுள்ளது ஆளுங்கட்சியை அநியாயத்துகுக் சூடேற்றியுள்ளது. 
பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. பம்மி, பதுங்கி கிடப்பது போல், அ.தி.மு.க.விடம் பா.ம.க. பம்மி கிடப்பதாக கடந்த சில நாட்களாக எழுந்த விமர்சனத்தை, அன்புமணி மற்றும் ராமதாஸின் ‘2021 தேர்தல் முலம் நாமே ஆளுங்கட்சி’ எனும் பேச்சு தவிடு பொடியாக்கி இருப்பதாக பா.ம.க. நிர்வாகிகள் குஷியாகினர். 


இந்த விஷயத்தில் அவர்கள் சந்தோஷப்படும் முன்பே, வேறொரு பிரச்னையை பேசி சொந்தக் கட்சியினரையே கிழி கிழி என கிழித்துவிட்டார் ராமதாஸ். அவர் என்ன சொன்னார் தெரியுமா?.... “நம் கட்சியான பா.ம.க. துவங்கி 32 ஆண்டுகளாகியும் ஒரு முறை கூட ஆட்சி அமைக்கவில்லை. அவ்ரும் 2021 நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 70 முதல் 80  எம்.எல்.ஏ.க்களைப் பெற்றால் இந்த முறை ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. அதற்கு, தொகுதிக்கு ஒரு லட்சம் ஓட்டுக்களை பெற்றே ஆக வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிக்ள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். திறமை உள்ள நிர்வாகிகள் கடினமாக உழைத்தால் தமிழகத்தில் வேறு கட்சிக்கு வேலை இருக்காது. 


தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பா.ம.க., முதல் இடத்திற்கு வர வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது, கேவலமாக உள்ளது.” என்று சொன்னதுதான் அது. 2021 தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் உள்ளது! என்று ராமதாஸ் பேசியதில் கடுப்பான அ.தி.மு.க., ‘தனியாக நின்றால் ஒரு தொகுதி கூட வெற்றி பெறுவதில்லை’ என்று அவரே சொல்லியிருப்பதன் மூலம், தங்கள் பலத்தை அறிந்து வைத்திருக்கும் டாக்டர் ஓவராக சீட் கேட்டோ, ஜெயித்தால் ஆட்சியில் பங்கு கேட்டோ தங்களை டார்ச்சர் செய்ய மாட்டார்! என்று ஆறுதலும் அடைகிறது. 
ஓஹோவ்!