புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் இந்து மதத்தின்புதிர்கள் நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம் என்று விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

திருமாவளவன் பதில்
இளையராஜாவின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த விவகாரத்தில் பாஜகவினர் களமிறங்கி, இளையராஜாவை விமர்சித்தோருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த திருமாவளவன், “அம்பேத்கர் பற்றி பேச மோடியே தகுதியற்றவர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மோடி, அமித் ஷா படித்திருப்பார்களா? வாதம் செய்ய வேண்டுமானால், மோடிக்கும் திருமாவளவனுக்கும் இடையே வாதம் நடக்கட்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலைக்கு வன்னியரசு கேள்வி
இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார் என அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், “இந்து மதத்தின் புதிர்கள் நூலை படித்துக்காட்ட நேரம் கொடுக்க முடியுமா” என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வன்னி அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம். நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா?” என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவில் அண்ணாமலையையும் அவர் டேக் செய்துள்ளார்.
