துப்பாக்கி முனையிலும் திமுகவின் தொண்டராகவே மரணிப்பேனே தவிர பாஜகவுக்கு தாவ மாட்டேன் என்று திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சி செய்தாலும் தமிழகத்தில் அக்கட்சியினால் காலுன்ற முடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிட்டு பாஜக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதால் பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வி.பி.துரைசாமி, திமுக எம்எல்ஏ கு.க. செல்வம், பாஜகவுக்கு தாவியதைத் தொடர்ந்து பலருக்கும் அந்த கட்சி குறிவைத்து வருகிறது. நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவும் பாஜகவில் ஐக்கியமானார்.

இந்நிலையில், திமுகவின் முக்கிய பெண் எம்எல்ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர் ஜகவில் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா;-மிக கேவலமான பொய் செய்திகளை பரப்புகின்றனர். அந்த செய்திகளை பார்த்து தானே அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.  தான் ஒருபோதும் பாசிச பாஜகவுடன் இணையமாட்டேன். திமுகவைத்தான் சுவாசிக்கிறேன்! துப்பாக்கி முனையில் நிறுத்தினாலும் நான் திமுகவின் தொண்டராக மரணிப்பேனே தவிர கட்சி மாறமாட்டேன் என ஆக்ரோஷமாக குறிப்பிட்டிருக்கிறார்.