Asianet News TamilAsianet News Tamil

நான் குஜராத் முதல்வரா..? ஆச்சரியப் படும் ஸ்மிருதி இராணி!

i am not in gujarat chief minister candidate race says smiriti irani
i am not in gujarat chief minister candidate race says smiriti irani
Author
First Published Dec 20, 2017, 7:59 PM IST


தான் குஜராத் முதல்வர் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுவதை ஆச்சரியத்துடன் கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அவ்வாறு கூறப்படும் தகவலை மறுத்துள்ளார்.  குஜராத் மாநில முதலமைச்சருக்கான போட்டியில் தான் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஸ்மிருதி இராணி.

குஜராத்தில் பாஜக., வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி, வாக்கு எண்ணிக்கையின் போது சற்று பின்தங்கியிருந்தாலும் பின்னர் முன்னேறி, ஒருவழியாக வெற்றி பெற்றார். இதனால், முதலமைச்சர் விஜய் ரூபானியே அடுத்த முறையும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்பட்டது. 

இருப்பினும், திடீரென குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பாஜக., ஆய்வு செய்ததாகவும்,  தேர்தலில் பெரும்பான்மை பெற்றாலும் 100 தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாமல் 99 தொகுதிகளை மட்டுமே கட்சி கைப்பற்றியதும் கட்சியினரால் அலசப் பட்டது. 

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முந்தைய தேர்தலில் 115 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ.க இந்த முறை பல தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்தது. இதனால் விஜய் ரூபானி மீண்டும் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு குறித்து சந்தேகம் தெரிவிக்கப் பட்டது. இதனிடையே, அடுத்த தேர்வாக, குஜராத் மாநில முதலமைச்சர் தேர்வுக்கான போட்டியில் ஸ்மிருதி இராணி பெயர் அடிபட்டது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது . ஆனால், தான் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறிவிட்டார் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணி. 

இதனிடையே புதன்கிழமை இன்று காலை குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச முதல்வர்களைத் தேர்வு செய்ய பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப் படவில்லை. எனவே, வரும் ஞாயிறு முதலமைச்சர்கள் குறித்து  அறிவிக்கப்படலாம் என்றும், திங்கட்கிழமை புதிய அரசு இரு மாநிலங்களிலும்  பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios