நானும் திராவிடன் தான் என்றும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நானும் திராவிடன் தான் என்றும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக ஆட்சியைப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அதிமுகவை காட்டிலும் பாஜக அக்கட்சிக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டது. ஆனால் அது அனைத்தையும் முறியடித்துவிட்டு திமுக வென்றது, ஸ்டாலின் முதல்வர் ஆனார். இந்நிலையில் திமுக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜக விமர்சித்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக அக்காட்சி பல்வேறு வியூகங்களையும், உத்திகளையும் கையாண்டு வருகிறது. ஆனால் அதில் பெரிய அளவில் பலன் இல்லை. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவாறே இதுநாள்வரை தேர்தலை சந்தித்து வந்தது.
கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அதில் பல்வேறு இடங்களில் கணிசமான வெற்றியைப் பெற்றது. சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் அதிமுகவையே பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்தது பாஜக. இதனால் அக்கட்சிக்கு புது தெம்பையும், உற்சாகவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைச் சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானால் ஏற்கலாம், ஆனால் திராவிட இயக்கங்கள் தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது என்றார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்யும் எனக் கூறினார். அவரது பேச்சுக்கு ஆளும் திமுக எம்எல்ஏக்களும் மேசையை தட்டி வரவேற்றனர். செங்கோட்டையனின் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில்தான் அண்ணாமலை இவ்வாறு கூறினார். மேலும் பேசிய அவர் செங்கோட்டையன் கூறியபடி திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை, நானும் திராவிடன் தான், திராவிடர்கள் தான் தமிழகத்தை ஆள முடியும் என்பதை ஏற்க முடியாது. திமுக அதிமுகவுடன் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள் தான்.

நானும் திராவிடன் தான், பாஜகவினர் மண் சார்ந்த தொழிலை செய்கின்றோம், ஆனால் அப்படி அதிமுக திமுகவில் எத்தனை பேர் உள்ளனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பாஜக கைப்பற்றும். சட்டமன்றத்தில் தேவையில்லாத வாதங்களை பாஜகவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது. பாஜகவுக்கு பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை, எங்கள் எதிரி திமுக மட்டும்தான் இவ்வாறு அவர் கூறினார்.
