ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடிய நபர்கள் 3 ஆண்டு காலமாக நீதிமன்ற விசாரணைக்காக அலைந்துகொண்டிருப்பதாகவும், அவர்களின் விலையுயர்ந்த உடமைகளை போலீசார் பறிமுதல் செய்து வைத்து அலைகழித்து வருவதாகவும் சூற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது,  அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிடோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  
சூழலியல் ஆர்வலர் முகிலன் கூறியதாவது: 

கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 179பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் நடைபெறகூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின காளைகளை அனுமதி வழங்ககூடாது, ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட கோரியும் கோரிக்கை மாநாடு ஒன்றை ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு சார்பில் கே.கே.நகர் தனியார் மண்டபத்தில் நடைபெறும் என முகிலன் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடிய நபர்கள் கடந்த 3 ஆண்டு காலமாக நீதிமன்ற விசாரணைக்காக அலைந்து கொண்டுள்ளனர் என்றும், 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர்கள் மீதி பதிவு செய்து அவர்கள் கொடுமை படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். 

போராட்டக்காரர்களுக்கு சொந்தமான லேப்டாப், செல்போன், விலையுயர்ந்த பல லட்ச ரூபாய் பொருட்களை பறிமுதல் செய்து திரும்ப கொடுக்காமல் 3 ஆண்டு காலமாக போலீசார் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். கலப்பின காளைகளை அனுமதிப்பதன் மூலம் பாரம்பரிய காளைகள் அழிய வாய்ப்புள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின காளைகள் பங்கேற்பது தொடர்பாக  ஜல்லிக்கட்டு கமிட்டி முடிவு செய்யும் என மதுரை ஆட்சியர் கூறியதால் உள்ளூரில் சண்டை ஏற்படும் நிலைமையை உருவாக்கி உள்ளதாகவும், கலப்பின காளைகள் பங்கேற்பது தொடர்பாக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என கூறினார்.