மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மற்றும் பராசிட்டமல் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதையை நிலவரம் குறித்து, அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, ”ஹைட்ராக்சி க்ளோரோகுயின்” மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை, இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாகக் குறிப்பிட்டார். 

மருந்து ஏற்றுமதியை அனுமதித்தால் மகிழ்ச்சியடைவோம் என தெரிவித்ததாக கூறிய ட்ரம்ப், ஒருவேளை மருந்து ஏற்றுமதியை இந்தியா அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை எனவும் குறிப்பிட்டார். ஆனால் இந்தியா ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் அதற்கு, பதிலடி கொடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார். மருந்து அனுப்பாவிட்டால் ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவை எச்சரிக்கும் தொனியில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மற்றும் பராசிட்டமல் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நமது நாட்டை நம்பி, உதவி கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. தேவையற்ற விவாதங்களுக்கும் அரசியலுக்கும் இடம் தர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.