தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் திமுகவின் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை அருகே கனியூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டதால், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், கட்சராயன் பாளையத்தில் உள்ள ஏரியை திமுகவினர் தூர்வாரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தூர்வாரப்பட்ட ஏரியில் இருந்த மண் முறைகேடாக அள்ளப்படுவதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், ஏரியை இன்று பார்வையிட செல்வதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஏரியை பார்வையிட இன்று காலை விமானம் மூலம் கோவை சென்ற ஸ்டாலின் அங்கிருந்து காரில் சேலம் செல்ல முயன்றார்.

ஆனால், அவரை சேலத்திற்கு செல்ல விடாமல், கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திமுக மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களின் திமுகவின் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.