ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஏற்கனவே எம்.எல்.ஏ வாகவும் அமைச்சராகவும் இருந்ததால் தொகுதியின் அனைத்து இடங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்கிறது.

தொகுதிக்குள் திடீர், திடீரென காரை நிறுத்திவிட்டு அங்குள்ள வியாபாரிகள் உள்ளிட்ட பலரை பெயர் சொல்லி அழைப்பதும், விசாரிப்பதும் அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

தினகரனை பொறுத்தவரை, அவருக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. கொட்ட வேண்டியதை கொட்டி அள்ள வேண்டியதை அள்ளிவிடலாம் என்பது அவரது கணக்காக உள்ளது.

திமுக ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கிறதோ, அதைப்போல பத்து மடங்கு கொடுக்க வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்கு அவர் உத்தரவு போட்டுள்ளதால், தினகரனும் தெம்பாகவே உள்ளார்.

இடையில் தீபாவுக்கு தொகுதி மக்களில் பலர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால் எந்த அளவுக்கு வாக்குகளை அவரால் பெறமுடிகிறது என்பதில் ஒரு சந்தேகம் உள்ளது.

திமுக வேட்பாளர் மருது கணேஷை பொறுத்தவரை, அவர் கட்சியின் அடிமட்டத் தொண்டர். ஆனால் தொகுதிக்குள் பெரிய அளவில் அறிமுகம் இல்லை.

ஆனாலும் அதிமுக பிளவு பட்டிருப்பதால், திமுகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எனினும், தற்போதுள்ள நிலையில் திமுக இரண்டாவது இடத்தை பிடிக்குமா? என்பதே சந்தேகம் என்கின்றனர் மூத்த திமுகவினர்.

பணபலம், ஆட்சி, அதிகார பலத்துடன் தினகரனும், மக்களுக்கு பரிச்சயமானவர் என்ற முறையில் மண்ணின் மைந்தனான மதுசூதனனும், அடிப்படை தொண்டர் என்ற நிலையில் மருது கணேஷும், களமிறங்கி உள்ளனர்.

ஜெயலலிதா அண்ணன் மகள் என்கிற வகையில் மக்களின் அனுதாபம் தீபாவுக்கு இருக்கிறது. 

எனவே, வெற்றி மாலை யார் கழுத்தில் விழப்போகிறது என்பது, வாக்காளர்களின் கைகளில் உள்ளது