விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது கொடுப்போம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்ற விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தைத்  மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக  மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கோயில் வளாகத்தில் துண்டு பிரசுரம்
கொடுக்கக்கூடாது என தடுத்தார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த  பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள், அய்யாக்கண்ணு கன்னத்தில் பளாரென அறைந்தார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளை நெல்லையம்மாள் செருப்பால் அடிக்க முயன்றார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயில் வளாத்தில் இருந்த பக்தர்கள்  அவர்களை சமரசம் செய்தனர். 

பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தும், செருப்பால் அடிக்க முயன்ற இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது கொடுப்போம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பொய்யும் புனைச்சுருட்டும், தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது
வழங்குவோம் என்று ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.